×

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவிலும் இந்தி திணிப்பு!: முதலில் இருந்த தமிழ் 9-வது இடத்திற்கு மாற்றம்..பொதுமக்கள் பரிதவிப்பு..!!

சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவிலும் இந்தியை திணித்துவிட்டனர். முதலில் இருந்த தமிழை 9 வது இடத்திற்கு மாற்றிவிட்டு இந்தியை முதல் இடத்தில் வைத்ததால் மொழி புரியாமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்துப்போனால் மாற்று சிலிண்டருக்கு முகவரிடம் பதிவு செய்வது முந்தய வழக்கம். அந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு தானியங்கி சமையல் எரிவாயு முன்பதிவு தற்போது நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு எரிவாயு சிலிண்டர் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு என தனித்தனி சேவை எண்களை அறிவித்துள்ளன. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டால் தமிழில் சேவையை தொடர எண் 1ஐ அழுத்தவும் என வரும். அதன்படி மிக எளிதாக சிலிண்டர் முன்பதிவை மக்கள் செய்து வந்தனர்.

தற்போது தமிழுக்கு பதிலாக முதலில் இந்தியை வைத்துவிட்டு தமிழை 9வது இடத்திற்கு தள்ளிவிட்டனர். இந்தியன் ஆயில் நிறுவனம் செய்துள்ள இந்த மொழிமாற்ற நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்பு போல் தமிழை முதல் இடத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 9-வது மொழியாக தமிழை தேர்வு செய்யும் வரை வாடிக்கையாளர்கள் இணைப்பில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மொழி புரியாத அப்பாவி மக்கள், உதவிக்கு மற்றவர்களை நாடும் நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 28 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் உத்தரபிரதேசம், மஹாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில் 2 கோடியே 14 லட்சம் இணைப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Cooking gas cylinder, reservation, hindi stuffing
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...