கொச்சின்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆமை வேகத்தில் நகரும் சாலை விரிவாக்க பணி-விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

போடி: கொச்சின்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மந்தமாக நடக்கும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கொச்சின்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போடி மெட்டுச்சாலை குறுகியதாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்து ஏற்பட்டன.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும் போடி மெட்டு மலைச்சாலை வழியாக அச்சத்துடன் சென்று திரும்பும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து மலைச்சாலையை விரிவாக்கம் செய்ய விடுத்த கோரிக்கையை ஏற்று, கேரள மாநிலம் மூணாறில் இருந்து போடிமெட்டு எல்லை வரை 70 கி.மீ தூரத்திற்கு ரூ.381 கோடியில் சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு பணி தொடங்கியது.

இப்பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சாலை விரிவாக்கப் பணியில் லாக்காடு, தேவிகுளம், கேப்ரோடு, முட்டுகாடு, பெரிய கானல், யானை இரங்கல், மூலத்துரை, பூப்பாறை, தலக்குளம், தோண்டிமலை, சுண்டல், பியல்ராம் பிரிவு, போடிமெட்டு எல்லை ஆகிய பகுதிகள் அடங்கும்.

இந்நிலையில், பூப்பாறையில் இருந்து போடி மெட்டு வரை மதிகெட்டான் சோலையாக வருவதால் கேரளா வனத்துறை வழக்கு தொடர்ந்து, 6 மாதமாக பணி நிறுத்தப்பட்டது. பின்னர் பிரச்னைக்குரிய இடத்தை தவிர்த்து, மற்ற இடங்களில் சாலைப்பணிகளை மேற்கொள்ள கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கொரோனா பரவலால் சாலை விரிவாக்கப்பணி நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் மூலம் மறுபடியும் பணிகள் தொடங்கி மந்தமாக நடந்து வருகிறது. போடி மெட்டு பகுதியை கடந்தவுடன் 3 கி.மீ தூரம் பணிகள் முடிந்து தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தோண்டி மலைப்பகுதியில் மந்த கதியில் நடக்கும் சாலைப்பணியை விரைந்து நடத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>