×

நிறைவேறாத 3வது குடிநீர் திட்டப்பணி தொடரும் தண்ணீர் பிரச்னையால் மக்கள் தாகம் தீரவில்லை

ஊட்டி :ஊட்டி நகராட்சியின் 3வது குடிநீர் திட்ட பணிகள் 10 ஆண்டுகளுக்கு மேல் முடிக்கப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில், கோரிசோலா உட்பட 10 அணைகளில் இருந்து குடிநீர் விநிேயாகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், பார்சன்ஸ்வேலி அணை பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையில் நீரேற்று மையம் அமைக்கப்பட்டு, அணையில் இருந்து ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கப்பட்டு, சுமார் 25 கிமீ., தூரம் உள்ள ஊட்டி நகருக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

1 எம்ஜிடி., திட்டத்தின் மூலம் 4.5 மில்லியன் லிட்டரும் 2 எம்ஜிடி., திட்டத்தின் மூலம் 9.00 மில்லியன் லிட்டரும் நாளொன்றுக்கு விநியோகம் ெசய்யப்படுகிறது. எனினும், பெருகி வரும் மக்கள் தொகையினால், தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீர் போதுமானதாக இல்லை.

மேலும், கோடைக் காலங்களில் மற்ற அணைகளிலும் போதுமான தண்ணீர் இல்லாத நிலையில், ஊட்டி மக்கள் தண்ணீருக்காக பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, ேகாடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. பெருகி வரும் மக்களை தொகையின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுக்கு முன் திமுக., ஆட்சியின் போது மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

1 எம்ஜிடி., திட்டத்தின் மூலம் 4.5 மில்லியன் லிட்டரும், 2 எம்ஜிடி., திட்டத்தின் மூலம் 9 மில்லியன் லிட்டரும் நாளொன்றுக்கு விநியோகம் செய்யப்படும் நிலையில், 3வது குடிநீர் திட்டம் நிறைவேற்றினால், 6.50 மில்லியன் லிட்டர் என மொத்தம் 20 மில்லியன் லிட்டர் வழங்க முடியும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இப்பணிகள் முடியாத நிலையில், ஊட்டி நகரில் உள்ள மக்களின் தண்ணீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை.

திமுக., ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே கடந்த 10 ஆண்டுகளாக இப்பணிகள் முடிக்கப்படாமல், மிகவும் மந்த கதியில் நடந்து வருகிறது. எனினும், இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தற்போது உள்ள அரசு பெரிதாக கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.
இதனால், இத்திட்டம் முடங்கி போய் உள்ளது. எனவே, தமிழக அரசு பாரபட்சம் பார்க்காமல், இத்திட்டத்தை விரைந்து முடித்து ஊட்டி மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நகர் மன்றம் இல்லாத நிலையில், இது குறித்து மாதம் தோறும் குரல் எழுப்ப கவுன்சிலர்கள் இல்லாததால், நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்தை விரைந்து முடிக்க எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

Tags : water crisis , Ooty: The 3rd drinking water project of Ooty Municipality has not been completed for more than 10 years.
× RELATED நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே...