திருப்பத்தூர் அருகே நியாய விலை கடை கட்ட கோயில் இடத்தில் இருந்த 2 மரங்கள் அகற்றம்-வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே நியாய விலை கடை கட்டுவதற்காக கோயில் இடத்தில் இருந்த 2 மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டது. இவற்றை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.திருப்பத்தூர் அடுத்த  ஜலகாம்பாறை கிராமத்தில் உள்ள பெருமாள்பட்டு பகுதியில்  ஊத்து மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் இன்று கூடுதல் நியாய விலை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில், நியாய விலை கடை கட்டப்பட உள்ள இடத்தில் 2 புளிய மரங்கள் இடையூறாக இருப்பதாக அப்பகுதியினர் அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் வெட்டியுள்ளனர். இதுகுறித்து விஏஓ மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த விஏஓ, அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, வெட்டப்பட்ட மரத்துடன் இதை ஏற்றிச்செல்ல இருந்த லாரியை பறிமுதல் செய்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மரங்களை வெட்டக்கூடாது

பசுமை தீர்ப்பாயம் ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும், பச்சை மரங்களை வெட்டக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சொந்த சுயலாபத்திற்காக மரத்தை வெட்டி மர்ம நபர்கள் கடத்துவது வேதனை அளிக்கின்றது என்று இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கோயில் இடத்தில் இருந்த பழமை வாய்ந்த புளிய மரங்களை வெட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>