×

விருத்தாச்சலம் அருகே சாலையில் மர்மமான முறையில் 20-க்கும் அதிகமான குரங்குகள் உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை

விருத்தாச்சலம் : விருத்தாச்சலம் அருகே சாலையில் மர்மமான முறையில் 20-க்கும் அதிகமான குரங்குகள் உயிரிழந்து கிடப்பதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ளது கருவேப்பிலை குறிச்சி. இப்பகுதில் சுமார் 100 ஏக்கர் அளவுக்கு அரசு காப்பு காடு உள்ளது. இந்த காப்பு காட்டில் குரங்குகள்,மான், மயில் போன்ற ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இதில் குரங்குகள் மட்டும் கருவேப்பிலை குறிச்சி விருத்தாச்சலம் சாலையில் பொதுமக்களிடம் உணவு வாங்குவதற்க்காக அவ்வப்போது சாலையின் ஓரங்களில் அமர்ந்திருக்கும். பொதுமக்களும் போகும் வழியில் அவ்வப்போது குரங்குகளுக்கு உணவளித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று இன்று காலையில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் சாலையில் இறந்து கிடந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

 இதே போல் காப்புக்காட்டின் உள்ளேயும் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த குரங்குகள் எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சாலை ஓரத்தில் இந்த குரங்குகள் இறந்துகிடப்பதால், சாலையில் செல்லும் பொதுமக்கள் இதற்கு உணவுப் பொருட்கள் வழங்குவார்கள். அதனால் உணவில் விஷம் வைத்து யாரேனும் குரங்கிடம் கொடுத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


மேலும் நோய்த்தொற்று ஏதேனும் காப்புக்காட்டில் பரவிவருகின்றதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. விருத்தாச்சலம் கால்நடை மருத்துவமனையில் குரங்குகளுக்கு பிரேத பரிசோதனை செய்த பிறகே காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குரங்குகள் இறந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த குரங்குகள் இறந்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : road ,Forest Department ,Vriddhachalam , More than 20 monkeys mysteriously killed on road near Vriddhachalam: Forest Department
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...