×

லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்து.. நடுக்கடலில் மூழ்கி 74 பேர் உயிரிழப்பு : ஐரோப்பாவிற்கு தஞ்சம் தேடி சென்ற போது பரிதாபம்!!

லிபியா : ஐரோப்பியா நாடுகளுக்கு தஞ்சம் தேடிச் சென்றவர்களின் படகு லிபியா அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்து நேரிட்டத்தில் 74 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லிபியா நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பாலியல் வன்கொடுமை, கடத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்தவர்கள் ஐரோப்பாவிற்கு இடைத் தரகர்கள் மூலம் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என 120 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, லிபியா அருகே கடற்பகுதியில் சென்ற போது, நீரில் மூழ்கி விபத்து நேரிட்டது.

இந்த தகவல் கிடைத்த கடலோர பாதுகாப்புப் படையினர் நீரில் தத்தளித்தவர்களை மீட்டு கரைக்குக் கொண்டு சேர்த்தனர். எனினும் நீரில் மூழ்கி 74 பேர் உயிரிழந்துவிட்டனர். கடலோரக் காவல்படையினர் 47 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 31 பேரின் உடல்களையும் அவர்கள் மீட்டுள்ளனர். கும்ஸ் கடற்கரைப்பகுதிகளில் கரை ஒதுங்கிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் தேடிச் சென்ற அகதிகளில் மத்திய தரைக்கடல் பகுதியில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் நடுக்கடலில் சிக்கி பலியாகி உள்ளனர்.  லிபியா நாட்டில் கும்ஸ் கடற்கரை பகுதியில் நடந்த இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : Libya , Libya, boat, capsize, accident
× RELATED வெள்ளத்தில் தத்தளிக்கும் லிபியா:...