×

மிக மோசம் பிரிவில் காற்றுத்தரம் தீபாவளிக்கு பின்னர் மேம்படும் : வானிலை மையம் நம்பிக்கை

புதுடெல்லி : மேற்கு மண்டல காற்றடுக்கு சுழற்சி மாற்றங்கள் காரணமாக தீபாவளிக்குப் பின் காற்றுத்தரம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய மண்டல அதிகாரி நம்பிக்கை அளித்துள்ளார். காற்று தரம் அளவீடு (ஏக்யூஐ) டெல்லியில் நேற்று முன்தினம் 500ஐ தாண்டி அபாயம் பிரிவுக்குச் சென்றது. தீபாவளி, சாத் பண்டிகைகளை முன்னிட்டு சரக்கு ஏற்றி வரும் கனரக வாகனங்கள் தலைநகருக்கு அதிகமான எண்ணிக்கையில் வருவதாலும், பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வாகனங்களில் அதிகளவில் வருவதாலும் வாகன புகை வெளிப்பாடு அதிகம் ஆகியுள்ளது. அண்டை மாநில பயிர்க்கழிவு எரிப்பு புகையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு மிகவும் அதிகம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

காற்றில் வேகம் இல்லாததால் புகை மாசு கலையாமல் டெல்லியை மையம் கொண்டு மக்களுக்கு சுகாதார சீர்கேடு மிரட்டல் விடுத்துள்ளது. இந்நிலையில், அபாயம் பிரிவில் இருந்து ஓரளவு மேம்பாடு கண்ட ஏக்யூஐ, மிகவும் மோசம் பிரிவில் நேற்று காணப்பட்டது. தீபாவளிக்குப் பின் நிலைமை மேலும் மேம்பாடு காணும் என இந்திய வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குநர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை சாரம்சம்:
மேற்கு மண்டல காற்றடுக்கு சுழற்சி கண்டுள்ளது. அதிலிருந்து புறப்படும் காற்று வேகத்துடன் டெல்லியில் வீசக்கூடும். அதுவும் தீபாவளிக்கு பின்னரே சுழற்சி காற்று டெல்லியை எட்டும். எனவே, தீபாவளி வரை ஏக்யூஐ மிகவும் மோசம் பிரிவில் நீடிக்கக்கூடும்.

ஞாயிறன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த மழை காற்று மாசுவை முற்றிலும் கரைக்குமா எனவும் கணிப்பது இப்போது கடினம். இப்போதைக்கு மேற்கு காற்றடுக்கு சுழற்சியில் இருந்து வீசக்கூடும் காற்றை நம்ப வேண்டியுள்ளது. தீபாவளிக்குப் பின் ஏக்யூஐ நிலைமை மேம்படும்.

சபர் அளித்த ஆறுதல் தகவல்

பட்டாசு வெடிக்காத தீபாவளியாக இருக்கும் பட்சத்தில், காற்றில் கலந்துள்ள பிஎம்2.5 நச்சுத்துணுக்கு கடந்த 4 ஆண்டைக் காட்டிலும் குறைவான அளவில் இந்தாண்டு இருக்கும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் ஏக்யூஐ கண்காணிப்பு அமைப்பான சபர் ஆய்வு மையம் கூறியுள்ளது. பட்டாசு புகையில் தான் நுரையீரலை அதிகம் பாதிக்கும் பிஎம்2.5 நச்சுத் துகள்கள் உள்ளன. பட்டாசு வெடிக்காத நிலையில், காற்றில் அந்த துணுக்குகள் கலக்காது. எனவே நடப்பாண்டு தீபாவளி பிஎம்2.5 இல்லாத தீபாவளியாக அமையும் என சபர் மைய அதிகாரி தெரிவித்து உள்ளார்.

வரப்போகுது மின்விசிறி மாஸ்க்

பேட்டரியில் செயல்படும் மின்விசிறிகளை கொண்ட புதிய மாஸ்க்கை சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நேற்று அறிமுகம் செய்தார். வெளிக்காற்றை நுகரவும், சுவாசித்த காற்றை வெளியேற்றவும் மினி சைசில் 2 ஃபேன்களுடன் புதிய மாஸ்க் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. மோக்‌ஷா மாஸ்க் எனும் அந்த மாடலை அமைச்சர் ஜெயினிடம் அதன் உற்பத்தியாளர்கள் அறிமுகம் செய்தனர். அதையடுத்து, எல்என்ஜேபி மருத்துவமனை டீன் சுரேஷ் குமார், ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டீன் பி என் ஷெர்வால் ஆகியோருக்கு வீடியோ கான்பரன்சில் அந்த மாஸ்க்கை அறிமுகம் செய்த ஜெயின், சோதனை அடிப்படையில் பலருக்கு அதனை பரீட்சித்து பார்த்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தினார்.

வெளிக்காற்றை சுவாசிக்கும் போது ஃபேனில் தொற்று வடிகட்டப்படும் என்றும், தொற்று பாதிப்பு அல்லது அறிகுறி இருப்பவர்கள் இந்த மாஸ்க் பயன்படுத்தும் போது அவர்கள் வெளிப்படுத்தும் காற்றும் வடிகட்டப்பட்டு வெளியேறுவதால் வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என உற்பத்தியாளர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags : Diwali ,Weather Center , Air Pollution, Deepavali, Diwali
× RELATED தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20கோடி மோசடி: 3பேர் கைது