கோவிஷீல்டு தடுப்பூசி 3ம் கட்ட சோதனைக்காக 1,600 தன்னார்வலர் தேர்வு: இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், சீரம் இந்தியா நிறுவனமும் இணைந்து, ‘கோவிஷீல்ட்’ கொரோனா தடுப்பு மருந்தின் 3ம் கட்ட சோதனைக்காக 1,600 தன்னார்வலர்களை சேர்க்கும் நடைமுறையை முடித்துள்ளன.

இது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீரம் இந்தியா நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து, நாடு முழுவதும் 15 மையங்களில் கொரோனா தடுப்பு மருந்தான ‘கோவிஷீல்ட்’டை மனிதர்களுக்கு அளித்து சோதனை நடத்தி வருகிறது.

இவை ஏற்கனவே, முதல் மற்றும் 2ம் கட்ட பரிசோதனைகளை முடித்து விட்டன. தற்போது, 3ம் கட்ட சோதனைக்காக 1,600 தன்னார்வலர்களை திரட்டும் பணி நடந்து வந்தது. இது, கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிந்தது.

நாட்டின் பல்வேறு ஆய்வு மையங்களில் இவர்களுக்கு இந்த தடுப்பூசி அளிக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்படும். 2 மற்றும் 3ம் கட்ட சோதனைகளின் முடிவுகள். ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்து கொரோனா நோய்க்கு ஒரு தீர்வாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

கோவிஷீல்ட் நாட்டில் மனித பரிசோதனையில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியாக இருக்கிறது. 2, 3ம் கட்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உதவியுடன் சீரம் நிறுவனமானது முன்கூட்டியே இந்தியாவில் விரைவாக தடுப்பு மருந்து கிடைக்கும் வகையில், கோவிஷீல்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஆபத்தான உற்பத்தி மற்றும் கையிருப்பு உரிமத்தின் அடிப்படையில் 4 கோடி டோஸ் அளவுக்கு கோவிஷீல்ட் மருந்தை தயாரித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனிகாவின் ஒத்துழைப்பில் கோவிஷீல்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* சச்சின் பைலட்டுக்கு தொற்று

ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சச்சின் பைலட், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `எனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் என்னை சந்தித்தவர்கள், தயவு செய்து உங்களை பரிசோதித்து கொள்ளுங்கள். நான் முறையான மருத்துவ ஆலோசனை பெற்று வருகிறேன். விரைவில் குணமடைந்து திரும்புவேன்,’ என்று கூறியுள்ளார். இவர் தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகி, ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* பாஜ எம்எல்ஏ சாவு

உத்தரகாண்ட் மாநிலம், அல்போரா மாவட்டத்தில் உள்ள சால்ட் சட்டப்பேரவை தொகுதியின் பாஜ எம்எல்ஏ சுரேந்திர சிங் ஜீனா (50). கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை அவர் இறந்தார்.

87 லட்சத்தை நெருங்குகிறது

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,905 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86,83,916 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றுக்கு ஆளானவர்களில் இதுவரை 80,66,501 பேர் குணமடைந்துள்ளனர்.

* கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா மரணம் 550 ஆகவும், மொத்த உயிரிழப்பு 1,28,121 ஆகவும் உள்ளது.

* தற்போது 4,89,294 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து 2ம் நாளாக சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>