×

மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவு என ஏபிவிபி புகார் நெல்லை பல்கலை பாடத்திட்டத்தில் அருந்ததிராய் எழுதிய புத்தகம் நீக்கம்: ஆசிரியர் சங்கம், அரசியல் கட்சிகள் கண்டனம்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு 2ம் ஆண்டு மூன்றாம் பருவத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய ‘வாக்கிங் வித் காம்ரேட்ஸ்’ என்ற பாட புத்தகம் சேர்க்கப்பட்டு 4 வருடங்களாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் இந்திய ராணுவம் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கங்கள் தொடர்பான தேவையற்ற கருத்துகள் இடம் பெற்றுள்ளதால் இதனை நீக்க வேண்டும் என பாஜக ஆதரவு அமைப்பான ஏபிவிபி கடந்த வாரம் நெல்லை பல்கலைக்கழகத்தில் மனு அளித்தது. இந்நிலையில் இந்தப் பாடம் திடீரென நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக ‘மை நேட்டிவ்லேண்ட்’ என்ற நெல்லையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் எழுதிய புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூட்டா மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் கூறுகையில், ‘குறிப்பிட்ட சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாக மாணவர்கள் படித்த பாடத்தை திடீரென நீக்குவது ஏற்புடையது அல்ல. தமிழக அரசின் உயர் கல்வித்துறை தலையிட்டு பாடத்தை மாற்றியதை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி கூறுகையில், ‘நக்சலைட்டுகள் குறித்த கருத்துகள் இருப்பதாக ஏபிவிபி அமைப்பினரும், சில சிண்டிகேட் உறுப்பினர்களும் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதுபற்றி கலை அறிவியல் டீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அது நீக்கப்பட்டது’ என்றார். ஆ.ராசா (திமுக துணைப் பொதுச் செயலாளர்):  பாஜவின் மாணவர் அமைப்பின் எதிர்ப்புக்குப் பயந்து-பணிந்து புத்தகத்தை நீக்கியிருப்பதில் அதிமுக அரசும் உடன்பட்டிருப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?. இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்) : பாஜ மாநில அரசு நிர்வாகத்திலும், அதிகாரத்திலும் நேரடியாக தலையிடுவது அதிகரித்து வருகிறது. எனவே, உடனடியாக அந்த நூலை பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அதிர்ச்சி அடையவில்லை
டிவிட்டர் பதிவில் அருந்ததி ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்கிங் வித் தி காம்ரேட்’ புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் நீக்கியிருப்பதாக கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட ஒரு தருணத்தில், உண்மையில் நான் சோகமாக இருக்க வேண்டும். ஆனால், மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஏனெனில், பாடத்திட்டத்தில் எனது புத்தகம் வைக்கப்பட்டுள்ளதே எனக்கு இதுவரை தெரியாது. ஏபிவிபி வலது சாரி சிந்தனையாளர்களின் அழுத்தத்தால் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால், கொஞ்சம் கூட ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையவில்லை. ஓர் எழுத்தாளராக எழுதுவது மட்டுமே என்னுடைய வேலை. பல்கலைக் கழகத்துடன் சண்டை போட வேண்டியதும் என்னுடைய வேலை அல்ல என்று கூறியுள்ளார்.

Tags : ABVP ,Maoists , ABVP complains of supporting Maoists
× RELATED வயநாடு தொகுதி மக்களை...