×

புதுவையில் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்ட துவக்க விழா, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முன்னதாக கலைஞர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். தமிழக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. திட்டத்தை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு 2 இட்லி, வெண்பொங்கல், கேசரி, சாம்பார் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் முதல்வர் நாராயணசாமியின் பெருமுயற்சியால் துவக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இங்குள்ள தெருவுக்கு கலைஞர் பெயரும், பல்கலைக்கழத்தில் ஒரு இருக்கையும், கலைஞருக்கு சிலையும் அமைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். கலைஞருக்கு அரசியல் ஆசானாக இருந்தவர் ஜீவானந்தம். அவரது பெயரில் செயல்படும் பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிக விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது, கலைஞர் பெயரிலான காலை உணவு திட்டம் தமிழகத்திலும் தொடங்கப்படும்’’ என்று தெரிவித்தார். சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்பி, ஜான்குமார் எம்எல்ஏ, காங்., மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், திமுக அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ, எஸ்.பி.சிவக்குமார், நாஜிம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : artist , Launch of breakfast program in the name of the artist in Puduvai
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...