×

இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன் குடும்பத்தினர் பெயரில் 500 ஏக்கரில் சொத்து வாங்கிய துரைக்கண்ணு: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் குவிப்பு; வெளிநாட்டில் நகைக்கடை இருப்பது அம்பலம்

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன் குடும்பத்தினர் பெயரில் 500 ஏக்கரில் தோப்புகள், நிலத்தை வாங்கி குவித்துள்ளதாகவும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சொத்து வாங்கி குவித்துள்ளதாகவும், வெளிநாட்டிலும் நகைக்கடை வைத்திருப்பதாகவும் மத்திய உளவுத்துறை நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் தஞ்சை மாவட்டத்தில் தொகுதிகளை பலப்படுத்த ஆளும்கட்சி ரூ.800 கோடியை கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. துரைக்கண்ணுவும், மகன் ஐயப்பனும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்களை பினாமிகள் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் வாங்கி குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் திடீரென இறந்ததால் இந்த பணம், சொத்து என்ன ஆனது என்பது தெரியாமல் ஆளும்கட்சியினர் திணறினர்.

இந்த பணம், சொத்துக்கள் பற்றி ஐயப்பன் வாய் திறக்காததால் அவர்களுக்கு நெருக்கமான கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவரான பாமகவை சேர்ந்த பெரியவன் (எ) முருகன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து பணம், சொத்துக்கள் பற்றி ரகசியமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அமைச்சர் சொத்து குவிப்பு தொடர்பாக குடந்தையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தமிழக வருவாய் புலனாய்வு அமைப்பும் ரகசியமாக விசாரித்து வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் 16ம் நாள் காரியம் நேற்றுமுன்தினம் பாபநாசம் ராஜகிரியில் உள்ள அவரது வீட்டில் எளிமையாக நடந்தது. இதில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

கட்சி தலைமை, உளவுத்துறை, போலீசார் கண்காணிப்பால் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமானவர்கள், பினாமிகள் பலர் பங்கேற்கவில்லை. உள்ளூர் மூத்த எம்பி பங்கேற்க மறுத்துவிட்டார். துரைக்கண்ணு இறந்ததால் காலியாக உள்ள வடக்கு மாவட்டம் மூத்த எம்பி கைக்குள் வருவதால் அவரே வடக்கு மாவட்டத்தையும் கண்காணிக்க உள்ளாராம். துரைக்கண்ணு சமூக ரீதியாக போனதுடன், மூத்த எம்பிக்கு எதிராக மாற்றத்தை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் மீது, தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர்.

அதனால், ஓரங்கட்டப்பட்டுள்ள, ஒதுங்கியுள்ள அதிமுக நிர்வாகிகளை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பிரபலப்படுத்தி வரும் தேர்தலில் நிறுத்தும் முயற்சியில் மூத்த எம்பி ஈடுபட்டுள்ளாராம். இந்தநிலையில், தமிழகத்தில் சொத்தை வாங்கி குவித்துள்ள துரைக்கண்ணு கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: துரைக்கண்ணு இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன் பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாழைதோப்பு, தென்னந்தோப்பு, நிலம் உள்ளிட்ட 500 ஏக்கர் சொத்துக்களை தனது அண்ணன் மகனின் மாமனார் பெயரில் வாங்கியுள்ளார்.

இதில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஒரு தோப்பை அடிமாட்டு விலைக்கு பேசி ரூ.30 லட்சம் கொடுத்து மிரட்டி வாங்கியுள்ளார். இதற்கு தோப்பின் உரிமையாளருக்கு பணம், கேரளாவில் உள்ள ஒரு தனியார் வங்கி மூலம் பட்டுவாடா ஆகியுள்ளது. இதுபற்றி அப்போதே தெரிந்ததால் கட்சி தலைமை துரைக்கண்ணுவையும், ஐயப்பனையும் அழைத்து கண்டித்துள்ளது. அப்போது பதிலளித்த துரைக்கண்ணு தோப்பை வாங்கியதாகவும், அதை ரூ.45 லட்சத்துக்கு விற்றுவிட்டதாகவும் தெரிவித்து விட்டாராம்.

சொத்து குவிப்பு பூதாகரமாகியுள்ளதால் துரைக்கண்ணுவுக்கு கேரளாவிலிருந்து எப்படி பணம் வந்தது என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. துரைக்கண்ணு இறந்தபின்னர் கட்சி தலைமை ஐயப்பனை விசாரிக்க தேடியபோது தலைமறைவான அவர் திருச்செந்தூர் சென்று அங்கிருந்து கேரளா சென்றுள்ளார். பின்னர் கேரளாவிலிருந்து வந்தபோதுதான் அவரை உளவுத்துறை அழைத்து வந்து விசாரித்துள்ளது. துரைக்கண்ணு, ஐயப்பனுக்கு கேரளா மாநிலத்தில் சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. துரைக்கண்ணு மருத்துவமனையில் இருந்தபோது அதை காப்பாற்றவே அவர் கேரளா சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோல் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் அவர்களுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், வெளிநாட்டில் நகைக்கடை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த பரபரப்பு தகவல்கள் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,jewelry store ,Andhra Pradesh ,Telangana , Durakkannu, who bought property on 500 acres in the name of his family 6 months before his death: Accumulation in Andhra Pradesh and Telangana; The presence of a jewelry store abroad is exposed
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி