×

சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் துப்பு துலங்கியது மாமனார், மாமியார், கணவரை கொன்ற மருமகள்: சொத்துக்காக சகோதரர், கூலிப்படையினரை அழைத்து வந்து தீர்த்துக் கட்டினார்

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு பைனான்ஸ் அதிபர், அவரது மனைவி, மகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மருமகளே சொத்துக்காக இந்தக் கொலையை கூலிப்படையை வைத்து செய்திருப்பது தெரியவந்துள்ளது. சென்னை பாரிமுனை அடுத்த சவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில்சந்த் (74). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி புஷ்பாபாய் (70), மகன் ஷீத்தல் (40), மகள் பிங்க் (36). இதில் மகள் பிங்க் திருமணமாகி வேறொரு இடத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது பெற்றோரின் வீட்டுக்கு மகள் பிங்க் போன் செய்திருக்கிறார். நீண்ட நேரமாகியும் தலில்சந்த் உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் போனை எடுக்கவில்லை. இதனையடுத்து, இரவு தனது பெற்றோரின் வீட்டுக்கு பிங்க் வந்துள்ளார். அங்கு வீட்டின் முன்புற கதவு திறந்திருக்கவே, சந்தேகத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது, சோபாவில் தலில்சந்த், புஷ்பாபாய், ஷீத்தல் ஆகிய 3 பேரும் நெற்றியில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி சத்தம் போட்டார்.

சம்பவம் குறித்து யானைகவுனி போலீசில் பிங்க் புகார் அளித்தார். இதனையடுத்து, பெருநகர சென்னை மாநகர கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், பூக்கடை துணை கமிஷனர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து, கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார், இறந்த 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து யானைகவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், சொத்து தகராறு காரணமாக இக்கொலைகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தலில்சந்த்தின் மகன் ஷீத்தலுக்கு திருமணமாகி, பின்னர் மனைவியை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனால் குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர். இக்கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவின்பேரில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையில், சவுகார்பேட்டை, யானைகவுனி, ஏழுகிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பதிவுகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதற்கிடையில், பைனான்ஸ் அதிபரின் மகன் ஷீத்தலின் மனைவி ஜெயமாலாவுக்கும் இடையே பிரச்னை இருந்தது தெரியவந்தது. ஷீத்தல் ராஜஸ்தானை சேர்ந்தவர். அவருக்கு மனதளவில் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், உறவினர்கள் யாரும் பெண் கொடுக்கவில்லை. அதனால் மகராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஜெயமாலா என்பவரை திருமணம் செய்தார். திருமணத்தின்போது மணமகனின் குறைகள் தெரிந்துதான் திருமணம் செய்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தனர்.  

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜெயமாலாவை கணவர் ஷீத்தல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிந்து விட்டனர். ஜெயமாலா, மகராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வந்தார். அங்கு கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசில் கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து புனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு, அங்கு உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னர் ஜெயமாலா தனது இரு சகோதரர்களுடன் இணைந்து சென்னை வந்து ஷீத்தலை சந்தித்து ரூ.5 கோடி கேட்டு மிரட்டியுள்ளார்.

ஆனால் ஷீத்தல் ரூ.25 லட்சம் மட்டுமே தரமுடியும் என்று கூறிவிட்டனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து யானைகவுனி போலீசில் ஏற்கனவே ஷீத்தல் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த மாதம் ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் போல தலில்சந்த் வீட்டுக்கு வந்துள்ளனர். முகம் மறைக்கும் அளவுக்கு கொரோனா பாதுகாப்பு உடை அணிந்திருந்ததால், யாருக்கும் அவர்களை தெரியவில்லை. அவர்கள் கொரோனா பரிசோதனை செய்வதுபோல வந்து, 3 பேரையும் கொல்லத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் திரும்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, 2 சகோதரர்கள் மற்றும் 3 கூலிப்படையினர் வீட்டுக்கு வந்து, சொத்தை பிரித்து தரும்படி சண்டை போட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் மோதல் எழுந்துள்ளது. அப்போது ஆத்திரத்தில் ஜெயமாலா மற்றும் சகோதரர்களுடன் வந்த 2 பேர் சேர்ந்து பைனான்ஸ் அதிபர் உள்பட 3 பேரையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் வீட்டுக்குள் வருவதும், பின்னர் வெளியேறுவதும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. காரில் தப்பிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இந்த தகவல்களை தனிப்படை போலீசார் திரட்டியுள்ளதால், குற்றவாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகள் காரில் புனேவுக்கு செல்வது தெரிந்தது. இதனால் தனிப்படை போலீசார் அவர்களை விரட்டிச் சென்றுள்ளனர். குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Father-in-law ,daughter-in-law ,mother-in-law ,brother , Father-in-law, mother-in-law, daughter-in-law killed by husband lost in Chennai shooting case: Brother brings in mercenaries for property
× RELATED மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தொடங்கியது..!!