×

9 ரயில் நிலையங்களுடன் அமைகிறது போரூரில் இருந்து பூந்தமல்லி வரை புது வழித்தடத்தில் மெட்ரோ ரயில்: ஜனவரியில் பணிகளை தொடங்க முடிவு

சென்னை: போரூரில் இருந்து பூந்தமல்லி வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 9 ரயில் நிலையங்களுடன் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் ஜனவரியில் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை - விமான நிலையம், பரங்கிலை - சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்து வருகிறது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் தடத்தை நீட்டிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அடுத்தகட்டமாக கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை 26.09 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வழித்தடம் மயிலாப்பூர், தி.நகர், வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த வழித்தடத்தில் போரூரில் இருந்து பூந்தமல்லிவரை 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. போரூர் சந்திப்பு, ராமச்சந்திரா மருத்துவமனை, ஐயப்பந்தாங்கல் பேருந்து நிலையம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பேருந்து டெர்மினல், பூந்தமல்லி பைபாஸ் சாலை ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

 உயர்மட்ட பாலம் அமைப்பில் அதாவது விமான நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை வரை அமைக்கப்பட்டுள்ள ரயில் தடத்தைப்போல் இந்த புதிய வழித்தடமும் அமையவுள்ளது. இந்த புதிய வழித்தடம் ஏற்கனவே சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 2 வழித்தடங்களையும் இணைக்கும் வகையில் அமையவுள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் 2021 ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த புதிய வழித்தடத்தில் ரயில்சேவை தொடங்கப்பட்டால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து மக்கள் நிம்மதியடைவார்கள் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : New Line ,Poonamallee ,Porur , Metro train on new route from Porur to Poonamallee to be set up with 9 railway stations: Work to start in January
× RELATED லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவன் பலி