தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு முடிவு அறிவிப்பு: அலாஸ்காவில் டிரம்ப் வெற்றி: ஜார்ஜியாவில் பதிவான தபால் வாக்குகளை கைகளால் எண்ணும்படி கவர்னர் உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் 10 நாட்களுக்குப் பிறகு அலாஸ்கா மாகாணத்தின் தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில், அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அவருக்கு கிடைத்துள்ள எலக்ட்ரோல் வாக்கு எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, ஜார்ஜியா மாகாணத்தில் தபால் வாக்குகள் அனைத்தையும் கைகளால் எண்ணும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. தபால் வாக்குகளை எண்ணுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதால், 4 நாட்களுக்குப் பிறகே தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு வெளியானது. அப்போதுதான், பெரும்பான்மைக்கு தேவையான 270 எலக்ட்ரோல் வாக்குகளை ஜோ பிடென் கடந்தார். இதன் மூலம், அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

தற்போதைய நிலவரப்படி, பிடென் 279 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால், 214 எலக்ட்ரோல் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள அதிபர் டிரம்ப், தபால் வாக்குகளில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி, தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறார். முறைகேடுகள் நடந்ததாக கூறி, அலாஸ்கா, பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன், அரிசோனா, நெவடா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்ப்பின் சார்பில் குடியரசு கட்சி வழக்கு தொடுத்தது. இதில், அலாஸ்காவில் இருவருக்கும் இடையே மிக குறைந்த வாக்கு வித்தியாசமே இருந்த நிலையில், தற்போது அதிபர் டிரம்ப் 56.9 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிடென் 39.1 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் டிரம்பின் எலக்ட்ரோல் வாக்குகளில் 3 அதிகரித்து, 214ல் இருந்து 217 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், டிரம்பின் இந்த வெற்றி பிடெனை எவ்விதத்திலும் பாதிக்காது. அதே நேரம், குடியரசுக் கட்சியின் கோட்டையான அலாஸ்காவில் ஒரு செனட் உறுப்பினர் பதவியை அக்கட்சி பிடித்துள்ளது. இதன்மூலம், குடியரசு கட்சியின் மொத்த செனட் உறுப்பினர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. செனட்டின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 100.  இதேபோல், 16 எலக்ட்ரோல் வாக்குகளை கொண்ட ஜார்ஜியாவில் உள்ள 159 மாவட்டங்களிலும் பதிவான லட்சக்கணக்கான தபால் வாக்குகளை மீண்டும் கைகளால் எண்ணும்படி, இந்த மாகாணத்தின் ஆளுநர் ரபென்ஸ்பெர்ஜர் உத்தரவிட்டுள்ளார்.

இவர் குடியரசு கட்சியை சேர்ந்தவர். டிரம்ப்பின் பிரசாரக்குழுவின் நிர்பந்தத்தால் இவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கருதப்படுகிறது.

மொத்தம் 50 லட்சம் வாக்காளர்கள் உள்ள இம்மாகாணத்தில், கடந்த வாரம் புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது டிரம்ப்பை விட 0.3 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார். மற்ற மாகாணங்களில் கிடைத்த வெற்றியின் மூலம் 270 எலக்ட்ரோல் வாக்குகளை அவர் பெற்று விட்டதால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்தே இங்கு வழக்கு தொடரப்பட்டது. வரும் 20ம் தேதிக்குள் தபால் வாக்குகள் அனைத்தையும் ைககளால் எண்ணி முடிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குப் பிறகு டிரம்ப் பங்கேற்ற பொது நிகழ்ச்சி

டெக்சாசில் உள்ள ஆர்லிங்டன் நகரில் படை வீரர்களுக்கான தேசிய நினைவிடத்தை அதிபர் டிரம்ப் நேற்று திறந்து வைத்தார். தேர்தல் முடிந்து 10 நாட்களாகும் நிலையில், முதல்முறையாக அவர் பங்கேற்ற பொது நிகழ்ச்சி இதுவாகும். பத்து நிமிடங்கள் மட்டுமே அவர் அங்கு இருந்தார். அப்போது, டிரம்ப் மிகவும் அமைதியாக காணப்பட்டார்.

வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியை நியமித்த பிடென்

தேர்தல் தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வரும் அதே நிலையில், வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளர் என்ற முறையில் தனக்கான புதிய அதிகாரிகளை பிெடன் நியமித்து வருகிறார். நேற்று முன்தினம் ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு அதிகாரிகளை நியமித்தார். நேற்று அவர், தனது நீண்ட கால உதவியாளரான ரோன் கிளெய்னை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமித்தார்.

Related Stories: