இந்திய அணியுடன் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கி, கிரீன் தேர்வு

மெல்போர்ன்: இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் கேமரான் கிரீன், வில் புகோவ்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்த நிலையில், விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் துபாயில் இருந்து நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றனர். இந்திய அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதுடன், பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் கைகலக்கிறது. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிம் பெய்ன் தலைமையில் மொத்தம் 17 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். புதுமுக வீரர்களாக வில் புகோவ்ஸ்கி (22 வயது, பேட்ஸ்மேன்), கேமரான் கிரீன் (21 வயது, ஆல் ரவுண்டர்), லெக் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சன், வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் மைக்கேல் நெசர்,  ஷான் அபாட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு ஷான் அபாட் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் படுகாயம் அடைந்த பில் ஹியூஸ் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. ஷெபீல்டு ஷீல்டு தொடரில் 5 இன்னிங்சில் விளையாடி 57 ரன் மட்டுமே எடுத்த ஜோ பர்ன்ஸும், டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

கொரோனா பிரச்னை காரணமாக 17 வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் ஜோ பர்ன்ஸுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. எனினும், அவர் டேவிட் வார்னருடன் இணைந்து இன்னிங்சை தொடங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் மோதவுள்ள ஆஸ்திரேலியா ஏ அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அனியில் இடம் பெற்றுள்ள பல வீரர்கள் பயிற்சி ஆட்டங்களில் களமிறங்க உள்ளனர். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிரசவத்தின்போது உடன் இருப்பதற்காக முதல் டெஸ்ட் முடிந்தது இந்தியா திரும்ப உள்ளார். இது டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோஹ்லி இல்லாத இந்திய டெஸ்ட் அணியை ஆஸ்திரேலியா மிக எளிதாக வீழ்த்தி விடும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கணித்துள்ளார். அந்த கணிப்பை இந்திய வீரர்கள் பொய்யாக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

ஆஸி. டெஸ்ட் அணி: டிம் பெய்ன் (கேப்டன்), ஷான் அபாட், ஜோ பர்ன்ஸ், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், மைக்கேல் நெசர், ஜேம்ஸ் பேட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேடு, டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலியா ஏ: ஷான் அபாட், ஆஷ்டன் ஏகார், ஜோ பர்ன்ஸ், ஜாக்சன் பேர்டு, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஹாரி கான்வே, கேமரான் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், நிக் மேடின்சன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நெசர், டிம் பெய்ன், ஜேம்ஸ் பேட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, மார்க் ஸ்டெகடீ, வில் சதர்லேண்ட், மிட்செல் ஸ்வெப்சன்.

Related Stories:

>