×

வாரச்சந்தையில் கூவி கூவி விற்பனை; காய்கறி வியாபாரத்தில் களம் இறங்கிய சிறுவர்கள்

நெல்லை: கடந்த மார்ச் இறுதியில் பரவிய கொரோனா நோயால் தமிழகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை 6 மாதமாக முடங்கியது. தொழில் செய்பவர்கள் தொழிலை இழந்தனர். நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் பலரும் வேலைவாய்ப்பை இழந்தனர். மழை இல்லாததால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு சந்தை இல்லாததால் குறைந்த விலையில் நஷ்டத்தில் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் வருவாய்க்கு வழியின்றி பலர் தங்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று கடந்த 6 மாதங்களை கடத்தினர். இதில் கிராம, நகரத்தினர் என்ற வேறுபாடு இன்றி பலதரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் பலர் இன்னும் அன்றாட வாழ்வுக்கான பொருளாதார ஆதாரம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். சிக்கலில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர். ஏற்கனவே இருந்த வேலையை இழந்தவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக பழக்கப்படாத வேலைகளைகூட பழக்கப்படுத்தி உழைத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 144 தடை உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் சகஜ வாழ்க்கை திரும்புவதற்காக கூடுதலாக உழைக்கத் தொடங்கியுள்ளனர். வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் வாழ்வதற்காகவும் இரவு பகலாக உழைக்கின்றனர். கிராமப்புறங்களில் பெற்றோருடன் இணைந்து பிள்ளைகளும் உழைக்க களம் இறங்கிவிட்டனர். 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் சந்தைகளுக்கு வந்து விளைபொருட்கள் விற்பதை காணமுடிகிறது. வெயில், மழையை பாராமல் வருவாய்க்காக கூவி கூவி விற்பனை ெசய்கின்றனர்.

இன்னும் சில மாணவர்கள் இணையதள கல்வி கற்பதற்கு ஸ்மார்ட் போன் வாங்கவும் வாங்கிய ஸ்மார்ட் போனிற்கு டேட்டா கார்டு போடவும் உழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராமப்பகுதிகளில் உழைப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மாலை, இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் உள்ள சில ஆசிரியர்கள் சிறப்பு திண்ணை வகுப்புகளை நடத்தி பாடம் கற்றுத்தருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், பெத்தவங்களுக்கு சரியான வேல இல்ல... விவசாயத்திலயும் ஒண்ணும் கிடைக்கல. கொரோனா வந்ததிலேயிருந்து கஷ்டம் மேல கஷ்டம்தான். பள்ளிகூடமும் திறக்கல... என்ன செய்ய பெத்தவகளோட சேர்ந்து ஒத்தாசையா ஏதாவது வேல செஞ்சா ஆன்லைன் கிளாசுக்காக செல்போன் வாங்க துட்டு கிடைக்கும்னுதான் கூவி கூவி காய்கறி வியாபாரம் செஞ்சிட்டிருக்கிறோம். எங்களைப்போன்று பல மாணவர்கள் கிராமங்களில் கூலி வேலைக்கு போய்ட்டிருக்காங்க’’ என்றனர்.

Tags : Boys , Gooey Gooey sale at the weekly market; Boys who landed in the vegetable business
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு