இந்தியாவில் மீண்டும் கால் பதிக்கும் முயற்சியில் 'பப்ஜி': புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களுடன் களமிறங்குகிறது..பப்ஜி வீரர்கள் உற்சாகம்..!!

டெல்லி: இந்திய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு உருவாக்கப்பட்ட 2 புதிய கேம்களுடன் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகிறது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. சிறுவர்களை பாதிப்பதாகவும், உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இச்செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பப்ஜி நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் அதிகாரப்பூர்வமாக தங்களது பணிகளை தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 700 கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன்  பப்ஜி மொபைல் இந்தியா என்ற பெயரில் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டு இயங்கும் என்ற அறிவிப்பை அதன் தாய் நிறுவனமான கிராபன் அறிவித்திருக்கிறது.

இதற்கென தரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்யவதற்காக இந்திய பயனர்களிடம் தனிப்பட்ட தகவல்களை சேமித்து வைக்கும் தரவு சேமிப்பு அமைப்புகளை இந்தியாவில் நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பப்ஜி விளையாட்டுக்காக அந்நிறுவனம் 740 கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 100 பணியாட்களை அமர்த்தவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் இச்செயல்பாடுகளை தொடங்குவதற்கான அனைத்து பணிகளிலும் பப்ஜி நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்தாண்டு தொடக்கத்திலேயே புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களை இந்தியாவின் சந்தையில் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பப்ஜி கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. பப்ஜியின் இந்த அறிவிப்பு இந்தியாவின் பப்ஜி விளையாட்டு வீரர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பப்ஜி தடைசெய்யப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 50 மில்லியனுக்கும் அதிகமாக அந்நிறுவனத்திற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>