×

இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன் 500 ஏக்கர் சொத்து வாங்கிய துரைக்கண்ணு... வெளிநாட்டிலும் நகைக்கடை: பரபரப்பு தகவல்கள்

சென்னை, :இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன் அமைச்சர் துரைக்கண்ணு, தனது அண்ணன் மகனின் மாமனார் பெயரில் 500 ஏக்கரில் தோப்புகள், நிலத்தை வாங்கி குவித்துள்ளார். இதற்கு கேரளாவிலிருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டிலும் நகைக்கடை உள்ளது என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம், மாவட்டத்தில் தொகுதிகளை பலப்படுத்த ஆளும்கட்சி ₹800 கோடியை கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், துரைக்கண்ணுவும், மகன் ஐயப்பனும் ₹5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்களை பினாமிகள் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் வாங்கி குவித்துள்ளனர். அமைச்சர் திடீரென இறந்ததால் இந்த பணம், சொத்துக்கள் பற்றி ஐயப்பனிடம் விசாரித்துள்ளனர். அவர் வாய் திறக்காததால் துரைக்கண்ணு மற்றும் ஐயப்பனுக்கு நெருக்கமான கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவரான பாமகவை சேர்ந்த பெரியவன் (எ) முருகன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து கோடிகள் பற்றி போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அமைச்சர் சொத்து குவிப்பு தொடர்பாக குடந்தையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் தமிழக வருவாய் புலனாய்வு அமைப்பும் ரகசியமாக விசாரித்து வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் காரிய நிகழ்ச்சி, நேற்று ராஜகிரியில் உள்ள அவரது வீட்டில் நடந்தது.  கட்சி தலைமை, உளவுத்துறை, போலீசார் தீவிர கண்காணிப்பால் இந்நிகழ்ச்சியில், பினாமிகள் பலர் பங்கேற்கவில்லை. உள்ளூர் மூத்த எம்பியும் வர மறுத்துவிட்டார். இந்நிலையில் துரைக்கண்ணு இறந்ததால் காலியாக உள்ள வடக்கு மாவட்டமும் மூத்த எம்பி கைக்குள் வருவதால் அவரே வடக்கு மாவட்டத்தையும் கண்காணிக்க உள்ளாராம்.

₹800 ேகாடி சுருட்டல், ₹5ஆயிரம் கோடி சொத்து குவிப்பு போன்றவற்றால் துரைக்கண்ணு மீது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர். அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: துரைக்கண்ணு இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன் பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாழைதோப்பு, தென்னந்தோப்பு, நிலம் உள்ளிட்ட 500 ஏக்கர் சொத்துக்களை தனது அண்ணன் மகனின் மாமனார் பெயரில் வாங்கியுள்ளார். இதில் ₹45 லட்சம் மதிப்புள்ள ஒரு தோப்பை ₹30 லட்சம் கொடுத்து மிரட்டி வாங்கியுள்ளார். இதற்கு தோப்பின் உரிமையாளருக்கு பணம், கேரளாவில் உள்ள ஒரு தனியார் வங்கி மூலம் பட்டுவாடா ஆகியுள்ளது.

இதுபற்றி அப்போதே தெரிந்ததால் கட்சி தலைமை துரைக்கண்ணுவையும், ஐயப்பனையும் அழைத்து கண்டித்துள்ளது. அப்போது பதிலளித்த துரைக்கண்ணு தோப்பை வாங்கியதாகவும், அதை ₹45 லட்சத்துக்கு விற்றுவிட்டதாக தெரிவித்துவிட்டாராம்.இந்நிலையில் சொத்து குவிப்பு பூதாகரமாகியுள்ள உள்ள நிலையில் துரைக்கண்ணுவுக்கு கேரளாவிலிருந்து எப்படி பணம் வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

துரைக்கண்ணு இறந்தபின்னர் கட்சி தலைமை ஐயப்பனை விசாரிக்க தேடியபோது தலைமறைவான அவர் திருச்செந்தூர் சென்று அங்கிருந்து கேரளா சென்றுள்ளார். பின்னர் கேரளாவிலிருந்து வந்தபோதுதான் அவரை  உளவுத்துறை மூலம் அழைத்து வந்து கட்சித் தலைமை விசாரித்துள்ளது. துரைக்கண்ணு, ஐயப்பனுக்கு கேரளா மாநிலத்தில் சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. துரைக்கண்ணு மருத்துவமனையில் இருந்தபோது அதை காப்பாற்றவே அவர் கேரளா சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோல் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் அவர்களுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டிலும் அவர்களுக்கு நகைக்கடை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பு தகவல்கள் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Durakkannu ,death ,shop , Minister Durakkannu, Jewelers, Excitement, Information
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி