×

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேற வேண்டும்; தேஜஸ்வி முதல்வராக ஆதரவு தர வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

பாட்னா: பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற வேண்டும் என்றும் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராக ஆதரவு தர வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி மட்டுமின்றி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும், ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதையடுத்து, நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி, 125 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி  110 இடங்களை கைப்பற்றியது.

அதேநேரம் தனிப்பெரும் கட்சியாக திரு.லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றிப் பெற்றது. 74 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க இரண்டாம் இடத்தில் உள்ளது.  பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த திரு. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதாவை விட குறைவான இடங்களையே பெற்றது. இருந்தபோதிலும் ஆட்சியை தக்கவைக்க திரு நிதிஷ்குமாரே முதலமைச்சராக இருப்பார் என்றும் பாஜக அறிவித்தது. இதற்கு காங்கிரசார் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற வேண்டும் என்றும் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராக ஆதரவு தர வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பாஜகவின் மதவாத அரசியலுக்கு திரு நிதிஷ்குமார் ஆதரவு தரக்கூடாது என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு திக் விஜய்சிங் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : BJP ,Bihar ,alliance ,Nitish Kumar ,Tejaswi ,Congress ,Chief Minister , Bihar, BJP Coalition, Nitish Kumar, Tejaswi, Congress
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்