வரிசை கட்டும் பண்டிகை எதிரொலி விமான கட்டணம் அதிரடியாக உயர்வு: குறைந்த டிக்கெட் கட்டண புக்கிங் நிறுத்தம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு விமான கட்டணம்  திடீரென உயர்ந்ததால் சொந்த ஊருக்கு விமானங்களில் செல்ல இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு வரிசை கட்டும் பண்டிகையே காரணம் என தெரிகிறது. தீபாவளி நாடு முழுவதும் வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு நீடித்தபோதிலும் சொந்த ஊரில் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாட பலர் ஆர்வமாக உள்ளனர். பஸ், ரயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள், முன்னதாகவே செல்ல விடுமுறை கிடைக்காதவர்களின் தேர்வாக விமான பயணம் உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் நேற்றில் இருந்து சென்னை உள்நாட்டு விமான சேவைகள் 180ல் இருந்து 200 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு அதிகப்பட்சமாக 60% உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதியளித்துள்ளது. அதன்படி இந்த எண்ணிக்கை 120+120 வீதம் 240 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் மக்களின் தீபாவளி பயணம்  ஆர்வத்தை விமான நிறுவனங்கள் பயன்படுத்தி தீபாவளிக்கு முந்தைய நாட்களில் குறிப்பாக வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை வரை பயண டிக்கெட்களின் கட்டணங்களை கணிசமாக  அதிகரித்துள்ளன. சென்னையிலிருந்து மதுரை செல்ல வழக்கமாக 3,500 க்குள் இருக்கும்.ஆனால் தற்போது தீபாவளியையோட்டி அந்த கட்டணம் 6 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதுவே பிசினஸ் கிளாஸ் என்ற உயர் வகுப்பாக இருந்தால் 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதைப்போல் தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ₹3 ஆயிரம் டிக்கெட் கட்டணம். ஆனால் தற்போது 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

திருச்சிக்கு 2,500 என்ற குறைந்தப்பட்ட டிக்கெட் கட்டணம். தற்போது 3,500 லிருந்து 7ஆயிரம் வரை  வசூலிக்கப்படுகிறது. சேலத்திற்கு 2,300 குறைந்தப்பட்ச கட்டணம் தற்போது 3,900 வரை வசூலிக்கப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய தினமான 13ம் தேதி வரைதான் இந்த கூடுதல் கட்டணம் இணையதளத்தில் காட்டுகிறது. தீபாவளி தினமான 14ம் தேதியிலிருந்து மீண்டும் பழைய குறைந்த கட்டணமே இணையதளத்தில் காட்டுகிறது. இதைப்போல் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தனியார் விமான நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவும் வசூலிக்கிறது.

Related Stories:

>