×

மாநகராட்சிக்கு சொந்தமான 2 கோடி மதிப்பு நிலம் மீட்பு

பெரம்பூர்: ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை சுப்புராயன் 2வது தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் 1957ம் ஆண்டு கஜேந்திரன் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த இடத்தில் சத்திய நாராயணா எலும்பு முறிவு வைத்தியசாலை இயங்கி வந்துள்ளது. கஜேந்திரன் மரணமடைந்த பிறகு அவரது மகன் முனுசாமி மற்றும் முனுசாமியின் மனைவி பார்வதி ஆகியோர் அந்த வைத்தியசாலையை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், முனுசாமியும் காலமான பிறகு பார்வதி மற்றும் அவரது பிள்ளைகள் இந்த எலும்பு முறிவு வைத்தியசாலையை நடத்தி வந்துள்ளனர். 1977 சதுர அடி கொண்ட அந்த இடத்திற்கு சம்பந்தபட்டவர்கள் சென்னை மாநகராட்சிக்கு வரி கட்டவில்லை என கூறப்படுகிறது.

மேலும் 50 ஆண்டுகள் குத்தகை முடிந்தும் தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தில் வசித்து வந்துள்ளனர். இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்திலும் நடந்து வந்துள்ளது. வரி கட்டவில்லை என்றால் அந்த இடத்தை மாநகராட்சி கையகப்படுத்தலாம் என நீதிமன்றமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நேற்று காலை திருவிக நகர் பொறுப்பு மண்டல அலுவலர் செந்தில்நாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரி முருகேசன், லட்சுமண குமார் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியோடு அந்த இடத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் இருந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர், “வீட்டை இடிக்க கூடாது” என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு போலீசாரின் உதவியுடன் வீட்டில் இருந்த பொருட்கள்  அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடம் முழுவதும் பொக்லைன் இயந்திரம் மூலம்  இடித்து தகர்க்கப்பட்டது. அப்போது, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது மாநகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யபட்ட இடத்தின் சந்தை மதிப்பு 2 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.



Tags : land ,corporation , 2 crore worth of land owned by the corporation
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!