×

கொரோனா ஊரடங்கால் 232 நாட்களுக்குப்பின் வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு:சிறுவர், முதியோருக்கு அனுமதி இல்லை: கட்டணமும் திடீர் உயர்வு

சென்னை: கொரோனா காரணமாக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா, 232 நாட்களுக்குப்பின் நேற்று பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. சிறுவர், முதியோருக்கு அனுமதி இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனை காண வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தினமும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இதனால், வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டது.

தற்போது, 232 நாட்களுக்குப்பின் பொதுமக்களின் பார்வைக்காக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நேற்று காலை திறக்கப்பட்டது. இதில், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேலான முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பார்வையாளர்களுக்காகன கட்டணம்  75ல் இருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும், உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்து வசதிகள் குறைவு காரணமாகவும், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை எதிரொலியாகவும் பார்வையாளர்களின் வருகை நேற்று குறைவாக இருந்தது. மேலும், பார்வையாளர்கள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதும் வந்த ஒரு சில பயணிகளையும் அதிர்ச்சி அடைய செய்தது.

Tags : Vandalur zoo , Vandalur zoo reopens after 232 days of corona curfew: No permission for children and senior citizens
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி 19ம்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை