×

கொலை, கொள்ளை என 30 வழக்குகள் உள்ள பாமக பிரமுகரை விடுவிப்பதற்காக அமைச்சருக்கு பல கோடி கைமாற்றம்: மறைந்த துரைக்கண்ணு பெயரை பயன்படுத்தி சொத்துகளை மிரட்டி வாங்கியது அம்பலம்

சென்னை: கொலை, கொள்ளை, ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, சாராயம் கடத்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள பாமக பிரமுகரை விடுவிப்பதற்காக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு பல கோடி ரூபாய் கைமாற்றம் செய்யப்பட்டது. துரைக்கண்ணு பெயரை பயன்படுத்தி பல பேரை மிரட்டி பல கோடி சொத்துக்களை மிரட்டி வாங்கியதும் அம்பலமாகியுள்ளது. தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு இறந்த பின்பு நாளுக்குநாள் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது. துரைக்கண்ணு இறந்த சில நாட்களில் அவரது இளைய மகன் ஐயப்பனின் நெருக்கமானவரும், துரைக்கண்ணுவின் பினாமியாக கருதப்படும் கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவருமான பாமகவை சேர்ந்த பெரியவன் (எ) முருகன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அவர்களது கைது பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதியில், அதிமுகவை பலப்படுத்த தலா ரூ.200 கோடி வீதம் ரூ.800 கோடி கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு ஆளும்கட்சியினர் நெருக்கடி கொடுத்ததாகவும், துரைக்கண்ணு குடும்பத்தினர் வாய் திறக்காததால், அதை வசூலிக்க துரைக்கண்ணு பினாமிகளாக கருதப்படும் முருகன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதும் தெரிந்தது. ஆளும்கட்சியினர், போலீசார் மூலம் நடத்திய ரகசிய விசாரணையில் முருகன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் கான்ட்ராக்டரிடம் இருந்து ரூ.267 கோடி மீட்கப்பட்டு மூத்த எம்.பி. ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டில் துரைக்கண்ணு ரூ.5,000 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பல சொத்துகள் முருகனை பினாமியாக வைத்து வாங்கியது தெரியவந்துள்ளது. தற்போது ரூ.800 கோடி விவகாரம் பூதாகரமான நிலையில் துரைக்கண்ணு வாங்கி குவித்த சொத்துகள் தொடர்பான புகார் பைலை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கையில் எடுத்து விசாரித்து வருகிறது. தமிழக வருவாய் புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ரவுடியான முருகன் மார்க்கெட் குத்தகைதாரர், ஊராட்சி தலைவர் என பெரியளவில் வளர்ந்தது எப்படி என்ற பரபரப்பு தகவல் வந்துள்ளது. அதன் விபரம் வருமாறு: மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமான பெரியவன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். கூரை கொட்டகையில்தான் குடும்பம் வசித்து வந்தது. வறுமையின் காரணமாக ஆரம்பத்தில் சாராய விற்பனையை முருகன் துவக்கினார். இதில் கொடிகட்டி பறந்த முருகன், போலீசாரின் உதவியோடு பெரிதாக வளர்ந்தபோது ரவுடியிசம், கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து, ஆள்கடத்தல், சாராயம் விற்பது போன்றவற்றில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 2015ல் முன்னாள் பாமக நிர்வாகி ஸ்டாலினின் தம்பியான வக்கீல் ராஜா கொலை வழக்கில் கைதான கொலையாளிகள் கோவை சிறையில் இருந்தனர். அப்போது அவர்கள் வெளியில் வருவது தெரிந்து அவர்களை கொலை செய்ய அங்கு சென்ற முருகன், தவறாக அப்பாவிகள் 3 பேரை கொடூரமாக வெட்டி கொன்றார். இதேபோல் கும்பகோணம் செல்வராஜ் கொலை வழக்கில் நேரடி தொடர்பு இருந்ததால் முருகன் மீது தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி கோவையிலும் கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து, சாராயம் கடத்தல், ரவுடியிசம் உட்பட 30வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் மறைந்த அமைச்சரின் மகனான ஐயப்பனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் நெருக்கமானார். இவரது ரவுடியிசம் மூலம் ஐயப்பன் நிறைய இடங்களில் பலரை மிரட்டி பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். கும்பகோணத்தில் கட்டிடங்கள், காமராஜ் சாலையில் உள்ள பழங்காலத்து வீடு உள்ளிட்ட சொத்துகளை உரிமையாளர்களை மிரட்டி ஐயப்பனுக்கு முருகன் வாங்கி கொடுத்துள்ளார். அரசியலிலும் வளர நினைத்த முருகன், ஐயப்பன் மூலம் ஊராட்சி மன்ற தலைவராக வேண்டுமென கேட்டு வந்தாராம். மேலும் அவருக்கு போட்டியாக நின்ற வேட்பாளர்கள் சிலருக்கு பணம் கொடுத்ததாகவும், மீறி போட்டியிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டியதால், அதற்கு பயந்து யாரும் போட்டியிட வில்லையாம். இதனால் போட்டியின்றி முருகன் ஊராட்சி மன்ற தலைவரானார்.

இதேபோல், தாராசுரம் மார்க்கெட் பழைய குத்தகைதாரர் மகனை கடத்தி வைத்து, அந்த மார்க்கெட்டை ஏலம் எடுத்துள்ளார். இதன்மூலம் மாதம்தோறும் அவருக்கு கோடிக்கணக்கில் வருவாய் வருகிறதாம். தற்போது முருகனுக்கு வீடு, நிலம் என பல கோடிக்கு மேல் சொத்து உள்ளதாம். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ சீட்டுக்கு ஆசைப்பட்ட முருகன், தன் மீதுள்ள அனைத்து வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்க ஐயப்பன் மூலம் முயற்சித்து வந்துள்ளார். இதற்காக துரைக்கண்ணு சமூகத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் மூலம் ஐயப்பன் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இதற்காக அந்த அமைச்சருக்கு பல ‘சி க்கள் பரிமாறியுள்ளதாக கூறப்படுகிறது.

* 2 இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்
பாமக பிரமுகர் முருகன் சாராயம் காய்ச்சுவது, கொலை, கொலை, ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருவதை கண்டுகொள்ளாமல் இருக்க போலீசாரை கவனித்ததாக கூறப்படுகிறது. போலீசாரும் பெரிதாக கண்டுகொள்ளாததால் முருகனின் ரவுடியிசம் நாளுக்குநாள் வளர்ந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் பினாமி ஒருவரின் மனைவியான பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டரும், கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரும் தற்போது அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டனர். அமைச்சரின் பினாமியின் உறவினர் என்பதாலும், நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் வாங்கியது பற்றி காவல்துறைக்கு சரிவர தகவல் தராததாலும் இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.

* 16ம் நாள் காரியத்தில் பங்கேற்க எம்பி மறுப்பு
அமைச்சர் துரைக்கண்ணு இறந்து நேற்றுடன் 11 நாட்களாகிறது. வயதானவர்கள் இறந்தால் கருமாதி எனும் 16ம் நாள் காரியத்தை இறந்த 16ம் நாளில்தான் நடத்துவர். ஆனால் துரைக்கண்ணுவுக்கு 16ம் நாள் காரியத்தை 11ம் நாளான நேற்று ராஜகிரியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் நடத்தினர். தமிழக அமைச்சராக இருந்த ஒருவரின் 16ம் நாள் காரியம் பத்திரிகை அடிக்காமல், நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தாமல் எளிமையாக நடந்தது. அமைச்சரின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மூத்த நிர்வாகி ஒருவர், அமைச்சரின் கருமாதியில் பங்கேற்க உள்ளூரை சேர்ந்த மூத்த எம்பி ஒருவரை அழைத்துள்ளார். இதற்கு பதிலளித்த அவர், இவ்வளவு பிரச்னைக்கும் நீங்கதான் காரணம். நான் வர முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.

Tags : Millions ,minister ,release ,murder ,robbery , Minister transferred Rs 30 crore to free Pamaka accused in 30 cases of murder and robbery
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...