×

விலைவாசி உயர்வு கிராமங்களில் களையிழந்த தீபாவளி பண்டிகை

திருவள்ளூர்: விலைவாசி உயர்வால் தீபாவளி கொண்டாடுவது எப்படி என தெரியாமல் கிராம மக்கள் விழிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழை கிராம மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். தற்போது போதிய மழை பெய்யாத நிலையில், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளும், அதைச் சார்ந்த விவசாய கூலித் தொழிலாளர்களும் அவதியில் உள்ளனர். இந்நிலையில் விலைவாசி உயர்ந்து வருவதால், வரும் 14ம் தேதி தீபாவளித் திருநாளை கொண்டாடுவதில் கிராம மக்கள் சிக்கலை எதிர்நோக்கி உள்ளனர்.

தற்போது, தங்கள் குழந்தைகளுக்கு, புதிய துணிமணிகளை வாங்காமல் இருந்தாலும், மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.600க்கும், கிலோ கோழிக்கறி ரூ.200 வரையும் விற்கப்பட்டு வருகிறது. இதனால், தீபாவளியன்று மட்டும் மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு, இறைச்சி செலவு மற்றும் இதர செலவு என குறைந்தது ரூ.1000க்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதேபோல், தீபாவளி மறுநாள் நோன்பு அன்று பலகாரங்கள் செய்ய தேவையான பச்சரிசி கிலோ ₹40க்கும், வெல்லம் கிலோ ரூ.120க்கும், சமையல் எண்ணெய் ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நோன்பு அன்று மட்டும் குறைந்தது ரூ.1,500 செலவு செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறு இறைச்சி மற்றும் பலகாரங்கள் செய்ய தேவையான பச்சரிசி, வெல்லம், எண்ணெய் என தீபாவளியன்றும், நோன்பு அன்றும் சேர்த்து, குறைந்தபட்சம் ரூ.2,500 செலவு செய்ய வேண்டிய நிலையில் கிராம மக்கள் உள்ளனர். இவ்வளவுக்கும் புதிய துணிமணிகள் கிடையாது. இவ்வாறு ‘‘காஸ்ட்லி’’ தீபாவளி விழா கொண்டாட வேண்டிய நிலையில், ஏழை கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது, கிராமங்களில் தீபாவளி பண்டிகை, களை கட்டாமலும், பண்டிகையின் அறிகுறி இன்றியும் மக்கள் உள்ளனர்.

Tags : festival ,Deepavali ,price hike villages , Deepavali festival weeded out in price hike villages
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...