பெங்களூருவில் டொயோட்டா கார் கம்பெனி லாக் டவுன் தொழிலாளர் போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது: கார்கள் டெலிவரி பாதிக்கும் அபாயம்

பெங்களூரு: ஜப்பானை தலைமையிடமாக கொண்ட டொயோட்டா கிர்லோஷ்கர், பெங்களூரு அடுத்த பிடதி தொழிற்பேட்டையில் இயங்கிவருகிறது. இங்கு, நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 6,000க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.  தொழிற்சாலை நிர்வாகம் இந்திய தொழிலாளர் சட்டத்தை பின்பற்றாமல், ஜப்பான் சட்டத்தை பின்பற்றி தொழிலாளர்களிடம் வேலை வாங்கி வருவதாக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.நிர்வாகம் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையை கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்ததும், நிர்வாகம் தானாக முன்வந்து லாக்டவுன் செய்துள்ளது. இருப்பினும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலை எதிரில் இரவு, பகல் என தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டம் 4ம் நாளாக தொடர்கிறது.

இது குறித்து தொழிற்சங்க தலைவர் பிரசன்னகுமார் கூறுகையில், கொரோனா காலத்திலும், நாங்கள் எதிர்பாராத அளவு உற்பத்தி கொடுத்துள்ளோம். மாதம் 80,000 கார் தயாரிக்கும் நிலையில் தற்போது 1 லட்சம் கார் தயாரிக்க நிர்வாகம் நெருக்கடி தருகிறது. 8 மணி நேரத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க சென்றால் கூட குற்றம் என நடவடிக்கை எடுக்கிறது. இதனால் பலர் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கூலி தொழிலாளர்களை காட்டிலும் மிகவும் கீழ்தரமாக நடத்தப்படுகிறோம். பணியின் போது தும்பினால், நடந்தால், அமர்ந்தால் ஏன் மூச்சு விட்டாலும் குற்றம் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார்கள். நிர்வாகம் சார்பில் எங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்கு முறைக்கு தீர்வு காணும்படி, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் சுமார் 20க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நாங்கள் உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகத்தை அணுகினால், பேச்சுவார்த்தைக்கு வராமல், லாக்டவுன் செய்துள்ளனர், என்றார்.

* முன்பதிவு செய்யப்பட்ட கார்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படுமா?

தற்போது நாள் ஒன்றுக்கு 300 கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் போராட்டத்திற்கு அஞ்சி தொழிற்சாலை நிர்வாகம் கடந்த 3 நாட்களாக லாக் டவுன் செய்துள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் தீபாவளி முடியும் வரை தொடர்ந்தால், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் உற்பத்தி பாதிக்கும். இதனால் ஷோரூம்களில் கார்கள் வாங்க முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு சரியான நேரத்தில் டெலிவரி கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்று தெரியவருகிறது.

Related Stories:

>