×

வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பது அவசியம்... கேப்டன் ரோகித் உற்சாகம்

துபாய்: ‘வீரர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பது அவசியம்’ என்று ஐபிஎல் டி20 தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டதுடன் 5வது முறையாக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது.

லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த அந்த அணி, குவாலிபயர்-1 மற்றும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ரூ.20 கோடி முதல் பரிசை அள்ளியது. டெல்லி அணிக்கு ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது. பரபரப்பான பைனலில் டாஸ் வென்று பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. கேப்டன் ஷ்ரேயாஸ் 65*, பன்ட் 56 ரன் விளாசினர். மும்பை பந்துவீச்சில் போல்ட் 3, கோல்டர் நைல் 2, ஜெயந்த் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து வென்றது. கேப்டன் ரோகித் 68, டி காக் 20, சூர்யகுமார் யாதவ் 19, இஷான் 33* ரன் விளாசினர். டெல்லி பந்துவீச்சில் நார்ட்ஜ் 2, ரபாடா, ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மும்பை வேகம் டிரென்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருதை ராஜஸ்தான் வேகம் ஜோப்ரா ஆர்ச்சர் தட்டிச் சென்றார். 5வது முறையாக கோப்பையை வென்றதுடன், சூப்பர் கிங்சுக்குப் பிறகு (2010, 2011) சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த 2வது அணி என்ற பெருமையும் மும்பைக்கு கிடைத்துள்ளது.

சாதனை வெற்றி குறித்து கேப்டன் ரோகித் கூறியதாவது: இந்த சீசன் முழுவதுமே எங்களுக்கு நல்ல விதமாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடக்கத்தில், வெற்றி பெறுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தோம். வீரர்களிடம் இருந்து இதை விட என்ன அதிகம் எதிர்பார்க்க முடியும்? அதன் பிறகு திரும்பியே பார்க்கவில்லை. முதல் போட்டியில் இருந்து பைனல் வரை வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு ஒரே ஓட்டம் தான். இதற்காக பின்னணியில் இருந்து உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே எங்கள் பணி தொடங்கிவிட்டது. தவறுகளை திருத்திக் கொள்வது, புதிய வியூகங்களை வகுப்பது என்று அலசி ஆய்ந்தோம். ஒரு கேப்டனாக பதற்றமின்றி செயல்பட அனைத்து வகையிலும் சமநிலை கொண்ட அணியை தேர்வு செய்வது அவசியம். கையில் குச்சியை வைத்துக்கொண்டு வீரர்களை விரட்ட முடியாது. அது எனது பழக்கமும் அல்ல. வீரர்கள் இயல்பான ஆடத்தை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட, அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். அதைத் தான் நான் செய்தேன்.

ஹர்திக், குருணல், போலார்டு போன்ற பேட்ஸ்மேன்களை தேவைக்கேற்ப பேட்டிங் வரிசையில் மாற்றி களமிறக்கினோம். பந்துவீச்சிலும் அதே வகையிலான வியூகத்தை தான் கையாண்டோம். சூர்யகுமார் அருமையான பார்மில் இருக்கிறார். உண்மையில் அவருக்காக நான் தான் விக்கெட்டை தியாகம் செய்திருக்க வேண்டும். இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காதது துரதிர்ஷ்டம் தான். அவர்கள் தான் இந்த விளையாட்டை எங்களுக்கு ஸ்பெஷலாக மாற்றி உள்ளனர். வாங்கடே மைதானத்தில் விளையாடாததும் சற்று ஏமாற்றமாகவே உள்ளது. இவ்வாறு ரோகித் கூறியுள்ளார்.

Tags : Rohit , It is necessary to give confidence to the players ... Captain Rohit's enthusiasm
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...