×

பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை பீகாரில் பாஜவின் அடுத்த கட்ட திட்டம்: நிதிஷை முதல்வராக்கினாலும் முக்கிய இலாகாக்களை கைப்பற்ற முடிவு

புதுடெல்லி: பீகார் தேர்தலில் கடும் இழுபறிக்குப் பிறகு ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட பாஜ கூட்டணி அடுத்த கட்ட திட்டம் குறித்து தீவிரமாக களமிறங்கி உள்ளது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடி, மீண்டும் நிதிஷ் குமாரையே முதல்வராக்கினாலும் கூட முக்கிய துறை அமைச்சர் பதவிகளை கைப்பற்ற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணிக்கும், தேஜஸ்வி தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. இரவு வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. மெகா கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியது. 243 சட்டப்பேரவை தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 128 இடங்கள் தேவை. எனவே பாஜ கூட்டணி ஆட்சி உறுதியாகி உள்ளது.

கடந்த முறை ஐக்கிய ஜனதா தளம் அதிக இடங்களை வென்றிருந்த நிலையில், இம்முறை பாஜவின் கை ஓங்கியிருக்கிறது. பாஜ 74 இடங்களில் வென்றது. ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு, 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனால், இம்முறை நிதிஷீக்கு முதல்வர் பதவி தரப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில பாஜ தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ‘‘பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தலைவராக நிதிஷ் குமார் தொடருவார். பாஜ, ஜேடியூ இடையிலான தொகுதிகள் வெற்றி வேறுபாடு கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. நாங்கள் கூட்டணி கட்சியினர், சமமானவர்கள். எனவே, நூறு சதவீதம் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் நீடிப்பார் என்று உறுதியாக கூறுகிறேன். நாங்கள் பீகாரை ஒருங்கிணைந்து வழி நடத்தி செல்வோம்’’ என்றார்.

நிதிஷை முதல்வராக்கினாலும், மாநில அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை தன்வசமாக்கிக் கொள்ள பாஜ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இம்முறை தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள அமைச்சர்கள் பலர் தோல்வியை தழுவினர். இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அமைச்சரவையில் பாஜவின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி நிதிஷிடம் இருந்தாலும் அதிகாரத்தை பாஜ தன் வசம் வைத்துக் கொள்ள அடுத்தகட்டமாக காய் நகர்த்தி வருகிறது. வழக்கம் போல் துணை முதல்வர் பதவியை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாஜ தலைமையகத்தில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் வெற்றி தொடர்பாக கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இக்கூட்டத்தில் பீகாரில் பாஜவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மோடி பேசுகையில், ‘‘பீகார் தேர்தல் வெற்றியின் ரகசியம் அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்குமான வளர்ச்சியை நோக்கிய பணிகள்தான். தேர்தல் வரலாம், போகலாம். ஆனால் இந்த தேசத்திற்கு சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பீகார் மட்டுமல்ல, மத்திய பிரதேசம், குஜராத், தெலங்கானா, லடாக்கிலும் கூட பாஜ வெற்றி பெற்றுள்ளது. நாட்டு மக்களுடன் உண்மையிலேயே தேசியளவில் தொடர்புடைய ஒரே கட்சி பாஜக மட்டுமே. வெறும் 2 எம்பி.க்கள், 2 அறைகளில் இருந்த பாஜ, தற்போது இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ளது’’ என்றார். இதே போல, பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான் வெற்றி பெற்றுதந்த மக்களுக்கு சல்யூட் செய்கிறேன். ஆதரவளித்த பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறி உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த வாரம் ஆட்சி அமைக்கப் போகிறது.

* 7 லட்சம் ஓட்டு பெற்ற நோட்டா
நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், 7.30 கோடி வாக்காளர்களில், 4 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 57.09 சதவீதமாகும். இவர்களில் 7 லட்சத்து 6,252 பேர், அதாவது 1.7 சதவீதத்தினர் நோட்டாவுக்கு வாக்களித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* 12 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
பீகாரின் ஹில்சா சட்டமன்ற தொகுதியை 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் கிருஷ்ணமுராரி ஷரன் 61,848 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வேட்பாளரான அட்ரி முனி 61,836 வாக்குகள் பெற்றுள்ளார். வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் பெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் புகார் எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில், “ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் அட்ரி முனி 547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். சான்றிதழ் பெறுவதற்கு காத்திருக்குமாறும் கூறப்பட்டது. ஆனால் திடீரென முதல்வர் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்தவுடன், தபால் வாக்குகள் ரத்து செய்யப்பட்டதாகவும், 13 வாக்குகள் வித்தியாசத்தில் அட்ரி முனி தோல்வி அடைந்ததாகவும் தேர்தல் அதிகாரி அறிவித்தார் “ என குறிப்பிடப்பட்டுள்ளது.

* தேர்தல் ஆணையத்திடம் புகார்
வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்றே குற்றம்சாட்டின. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு 10 கேள்விகளை கேட்டு புகார் மனுவை எதிர்க்கட்சிகள் அனுப்பின. அதில், எதிர்க்கட்சிகள் முன்னிலை வகித்த இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதப்படுத்தப்பட்டது ஏன்? பிற்பகலில் 5 மணி நேரம் தேர்தல் முடிவுகள் ஒரே நிலையை காண்பித்தது எப்படி?, எதிர்க்கட்சிகள் 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இருந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் மாறியது எப்படி?, 50க்கும் அதிகமான தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பே, பிரதமர் மோடி, அமித் ஷா பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்தது ஏன்?, எதிர்க்கட்சிகள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளில் சான்றிதழ் வழங்க தாமதமானது ஏன்? நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி 119 தொகுதிகளில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்ததால், முடிவுகள் மாற்றப்பட்டனவா? முதல்வர் வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்த பிறகே முடிவுகள் மாற்றப்பட்டதன் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

* பீகார் மேட்டர் ஓவர்... அடுத்தது மேற்கு வங்கம்
பீகார் தேர்தலில் திட்டமிட்டபடி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், அடுத்ததாக பாஜ தனது கவனத்தை மேற்கு வங்கம் பக்கம் திருப்பி உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில், பீகாரைப் போலவே அங்கும் ஆட்சியை கைப்பற்றி திட்டங்களை வகுத்து தயாரித்து விட்டதாம். இதுகுறித்து பாஜவின் தேசிய பொதுச் செயலாளரான கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ‘‘பீகாரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் மாற்றம் நிகழும். அதற்கான திட்டங்கள் இறுதிகட்டத்தில் உள்ளன. மேற்கு வங்க மக்கள் திரிணாமுல் காங்கிரஸின் தவறான ஆட்சி அதிகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Tags : phase ,Bajwa ,Narendra Modi ,chief minister ,Bihar ,Nitish , BJP to stage next phase of PM Modi-led high-level consultation in Bihar: Nitish
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்