×

எல்லை பிரச்னைக்கு தீர்வு லடாக்கில் குவிக்கப்பட்ட வீரர்களை திரும்ப பெற இந்தியா-சீனா முடிவு: விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியா - சீனா இடையே கடந்த 6 மாதங்களாக நீடித்து வந்த எல்லை நிலைப்பாட்டை தீர்ப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே கடந்த ஆறு மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகின்றது. சீனா தொடர்ந்து படைகளை குவித்ததை அடுத்து இந்தியா சார்பிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்லையில் அமைதியை மீண்டும் கொண்டு வரும் வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை தொடர்நது நடந்து வருகின்றது. இதுவரை 7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தது. 8வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த 6ம் தேதி சுஷிலில் நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளும் வீரர்களை திரும்ப பெறுதல், பிரச்னைக்குரிய பகுதிகளில் இருந்து ஆயுதங்களை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 3 கட்ட செயல்முறைகள் குறித்த முன்மொழிவுக்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட ஒரே நாளில் ஆயுதமேந்திய வீரர்களை திரும்ப பெறுவது, கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வீரர்களை திரும்ப பெறுதல் மற்றும் வீரர்கள் திரும்ப பெறப்பட்ட இடங்களில் இரு தரப்பினரும் வீரர்கள் அகற்றும் நடைமுறையை சரிபார்ப்பது உள்ளிட்டவையும் இதில் அடங்கும். வீரர்களை அகற்றுவது தொடர்பான முன்மொழிவுக்கு இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டநிலையில், அடுத்த பேச்சுவார்த்தையின்போது இவை ஒப்பந்தங்களாக கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனை தொடர்ந்து 9வது சுற்று பேச்சுவார்த்தையானது அடுத்த சில நாட்களில் நடைபெறலாம் என கூறப்படுகின்றது.

50,000 வீரர்கள் குவிப்பு
* தற்போது கிழக்கு லடாக்கின் பல்வேறு இடங்களிலும் சுமார் 50,000 இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
* இதே அளவு எண்ணிக்கையிலான வீரர்களை சீனாவும் நிறுத்தி உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
* முதல் கட்டமாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட முதல் மூன்று நாட்களுக்குள் இரு நாடுகளும், தங்களது டாங்கிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள், கவச வாகனங்கள், பெரிய உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும்.
* ஆனால் இவை அனைத்தும் முன்மொழிவுகள் மட்டுமே என்றும் இதுவரை எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்பதையும் உயர்மட்ட தகவல்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன.

Tags : India ,troops ,China ,Ladakh , India-China decision to withdraw troops concentrated in Ladakh: Agreement to be signed soon
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...