×

மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது ஓடிடி, ஆன்லைன் மீடியாக்களுக்கு புது கட்டுப்பாடு: பல்வேறு புகார்களைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: ஸ்ட்ரீமிங் தளங்கள், ஆன்லைன் செய்தி தளங்கள் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் மீடியாக்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்டவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து இந்தியாவின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. முதலில் இவற்றில் வெப் சீரிஸ்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய திரைப்படங்கள் வெளியீடு, கிரிக்கெட் தொடர்கள் ஒளிப்பரப்பு என அடுத்தகட்ட நிலைக்கு சென்றுள்ளது. ஆனாலும், ஓடிடி தளங்களில் வெளியாகும்  தொடர்களில் சர்ச்சை நிறைந்த பல கருத்துகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

எந்த தணிக்கையும் செய்யப்படாமல் சுதந்திரமாக வெளியிடப்படுவதால் இணையதள சினிமாக்களால் சமூகத்தில் பிளவுகள் ஏற்பட வாய்ப்புண்டும் என்றும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓடிடி தளங்களை வரைமுறைப்படுத்த ஒரு தன்னாட்சி அமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது. ஆன்லைன் மீடியாக்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்பதாக தகவல் மற்றும்தொலை தொடர்பு அமைச்சகமும் கூறியிருந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஆன்லைன் தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி, ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி இயங்குதளங்கள் உள்ளிட்டவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, ஆன்லைனில் செய்திகள், வீடியோ, ஆடியோ, திரைப்படங்கள் தொடர்பான கொள்கைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது.

இந்த விதிகளை இந்திய அரசின் முன்னூற்று ஐம்பத்தி ஏழாவது திருத்த விதிகள் 2020 என்று அழைக்கலாம். இவை ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வருகின்றன. இதனால் ஓடிடி தளங்கள், ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் வரும் செய்திகள், நிகழ்ச்சிகளை இனி அரசு கண்காணிக்க, பரிசோதிக்க முடியும். ஓடிடியில் வெளியாகும் படங்கள். சென்சார் செய்யப்படுமா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. எதிர்காலத்தில் சென்சார் செய்யப்படுவதற்கான முதல் படி இதுதான் என்றும் கூறப்படுகிறது. தற்போது வரை இந்திய பத்திரிகை கவுன்சிலானது அச்சு ஊடகங்களையும், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் செய்தி சேனல்களையும், விளம்பர தர நிர்ணய கவுன்சிலானது விளம்பரங்களையும் கட்டுப்படுத்தி வருகின்றது. மத்திய திரைப்படசான்றிதழ் வாரியமானது திரைப்படங்களை கண்காணித்து சென்சார் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

* ரூ.2லட்சம் கோடி ஊக்கத்தொகை
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு ரூ.2லட்சம் கோடி அளவிலான சலுகைகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது நாட்டில் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கப்பதற்கு உதவும். மேலும் ஆத்மநிர்வார் பாரத் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இருக்கும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Tags : ODT brought under federal surveillance, new regulation for online media: Action taken following various complaints
× RELATED ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம்...