30 ஆண்டாக வளர்ச்சியடையாத மொகாமா தொகுதியின் சோகம்; ரவுடிகளின் கையில் சிக்கியது பீகாரின் ‘மினி கொல்கத்தா’ 38 கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர் மீண்டும் வெற்றி

பாட்னா: பீகாரின் ‘மினி கொல்கத்தா’ என்று அழைக்கப்படும் மொகாமா தொகுதியின் வேட்பாளர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவர் மீது 38 கிரிமினல் வழக்குகள் உள்ளன. பீகார் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மொகாமா சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அனந்த் சிங், 78,721 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ராஜீவ் லோகன் நாராயண் சிங்கை 35,757 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன்மூலம் இந்த தொகுதியில் அனந்த் சிங் ஐந்தாவது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மொகாமா தொகுதியின் ‘பாகுபலி’ என்று அழைக்கப்படும் அனந்த் சிங் மிகப் பெரிய குற்றப்பின்னணி கொண்டவர். அவர் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் அளித்த வாக்குமூலத்தின்படி, 1979ம் ஆண்டில் முதன்முறையாக அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாட்னா மாவட்டத்தில் மட்டும் 34 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவற்றில் 6 கொலை வழக்குகள் அடங்கும். ஆனால், அவர் மீதான பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. எம்எல்ஏ ஆவதற்கு முன்பாகவே 12 கிரிமினல் வழக்குகள் இருந்தன.

இவர் மீது கொலை வழக்குகளைத் தவிர, கொலை முயற்சி, மிரட்டல், கடத்தல், யுஏபிஏ சட்டம் உள்ளிட்ட பிற கடுமையான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், எம்எல்ஏ ஆவதற்கு முன்பு 2005ல் நடந்த மொகாமா சட்டமன்ற தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளராக போட்டியிட்ட போது அவர் அளித்த உறுதிமொழி பத்திரத்தில், ரூ.2 லட்சம் ரொக்கமும், ரூ. 15 லட்சம் மதிப்பில் பாலிசி மற்றும் 100 கிராம் தங்கமும் உள்ளதாக கூறியுள்ளார். அதேசமயம் அடுத்தடுத்து எம்எல்ஏவாக தேர்வான 15 ஆண்டுகளில் மொத்த அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ.9 கோடியே 64 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில், அசையாச் சொத்தின் மதிப்பு ரூ.56 லட்சமாக அதிகரித்துள்ளது.

கடந்த 1952ல் உருவாக்கப்பட்ட மொகாமா சட்டமன்றத் தொகுதியானபின், கடந்த 3 முறை அனந்த் சிங் வென்றுள்ளார். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட சீட் தராததால் சுயேட்சையாக நின்று வென்றார். பின்னர், ஆர்ஜேடி கட்சியில் சேர்ந்தார். பீகாரின் ‘மினி கொல்கத்தா’ என்று அழைக்கப்படும் மொகாமா தொகுதி, 1980ம் ஆண்டு வரை தொழில், வர்த்தகம், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் முக்கிய மையமாக இருந்தது. அதன்பின்னர் அனந்த் சிங் செல்வாக்கு அதிகரித்ததுடன்  கடந்த 30 ஆண்டுகளில் அனைத்து தொழில்களும் மூடப்பட்டன. கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், கொலை, கொள்ளை,

ஆட்கடத்தல் போன்ற குண்டர்களின் ராஜ்ய மையமாக மொகாமா தொகுதி மாறியதால், இன்றும் மிகவும் பின்தங்கிய தொகுதியாகவே உள்ளது. சுதந்திர காலத்தில் நிறுவப்பட்ட பாட்டா, பாரத் வேகன், மெக்டொவல், பருத்தி ஆலை போன்ற அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. ஒரு காலத்தில் இந்தத் தொழில்களில் 6,000 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அதேநேரத்தில், 1.06 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மொகாமா தொகுதியை மேம்படுத்துவதற்கான கனவும் இன்றுவரை நிறைவேறவில்லை. அங்கு வசிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகளின் வலி அப்படியே உள்ளது. அடிப்படை வசதிகள், சுகாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட கிழக்கு பீகாரின் நஸ்ரத் மருத்துவமனை முக்கிய சுகாதார மையமாக இருந்தது. ஆனால் குண்டர்களின் ராஜ்ஜியத்தால் கடந்த 10 ஆண்டுக்கு முன் மூடப்பட்டது. இவ்வாறாக, பல தொழில் நிறுவனங்கள் ஓட்டம் பிடித்த நிலையில் குண்டர்களின் கையில் சிக்கிய மொகாமா தொகுதி மக்கள், மீண்டும் அனந்த் சிங்கை ேதர்வு செய்துள்ளதால், அவர்களுக்கு எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ? என்று சக பீகாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>