×

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருவிழாவில் இன்று அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம்

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று அதிகாலை சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதை பக்தர்கள் காண ஆன்லைனில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தென்தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் பிரசித்திப் பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் உள் திருவிழாவாக தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, உள்பிரகாரம் வலம் வருதல் நடந்து வந்தது.

11ம் நாள் விழாவில் டவுன் கம்பாநதி காமாட்சியம்மன் கோயில் அருகே பேட்டை சாலையில் அமைந்துள்ள காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடத்த வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையேற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறையின் அனுமதியின் பேரில் தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். சுவாமி நெல்லையப்பரும் ரிஷப வாகனத்தில் காட்சி மண்டபம் சென்றடைந்தார். அங்கு காந்தி அம்பாள் சுவாமியை வலம் வரும் வைபவம் நடந்தது.

இதையடுத்து சுவாமி ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் கோயிலுக்கு எழுந்தருளினர். அப்போது திரிபுரசுந்தரியம்மன் கோயில் அருகே திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் வைபவம் நடந்தது. அதை தொடர்ந்து இன்று அதிகாலையில் காலை 4 மணிக்கு சுவாமி சன்னதியில் நெல்லையப்பருக்கு காப்பு காட்டும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமியை மேளதாளம் முழங்க நெல்லை கோவிந்தர் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கு நெல்லையப்பருக்கு பாதபூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கோயில் செயல் அலுவலர் ராமராஜ், கோயில் ஊழியர்கள், குறைந்தளவிலான போலீசார் மட்டுமே பங்கேற்றனர். திருக்கல்யாணம் நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அதிகாலை 3 மணிக்கே கோயில் முன்பு கூடினர். ேகாயில் நிர்வாகம் அனுமதி மறுப்பால், அவர்கள் கலைந்து சென்றனர். கோயில் இணையதளம் மூலம் பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்வுகளை கண்டுகளித்தனர். காலை 6 மணிக்கு பின்னர் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் சுவாமி, அம்பாளை பக்தர்கள் தரிசித்தனர். திருக்கல்யாண நிகழ்வை ஒட்டி கோயிலுக்கு சென்ற பக்தர்களுக்கு மதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன. மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம் இனிப்புகளை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கல்லத்தியான், ஆட்டோ பாலு, சங்கரலிங்கம், கோல்டன்கான் ஆகியோர் பங்கேற்றனர். நெல்லை ஆவின் சேர்மன் சுதா பரமசிவன், இந்து முன்னணி வக்கீல் குற்றாலநாதன் ஆகியோர் சார்பிலும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags : Swami ,Ambal ,Nellaiyappar Temple Ippasi Festival , Swami and Ambal get married this morning at the Nellaiyappar Temple Ippasi Festival
× RELATED சித்திரை (ஈ) தந்த முத்திரை சீடர்கள்