நீலகிரியில் கடும் உறைபனி: குளிரால் பொதுமக்கள் அவதி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர்பனி விழும். நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்திற்கு மேல் உறைபனி விழத்துவங்கும். துவக்கத்தில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் காணப்படும். பின், படிப்படியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பனி விழும். இம்முறை கடந்த மாதம் துவக்கம் முதலே நீர்பனி விழத்துவங்கியது. ஆனால், இடையில் சில நாட்கள் மழை பெய்ததால், நீர்பனி குறைந்து காணப்பட்டது. எனினும், கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில், மாவட்டம் முழுவதும் நீர் பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது.

இதனால், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறிகள் பாதிக்கும் அபாயம் நிலவியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில் நேற்று இரவு நீலகிரி மாவட்டம் முழுவதும் உறைபனி கொட்டியது. குறிப்பாக, ஊட்டி, கேத்தி, பாலாடா, கிளன்மார்க்கன், பைக்காரா, சாண்டிநல்லா, தலைகுந்தா போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பல இடங்களில் வெண்மை நிறத்தில் பனி படர்ந்து காணப்பட்டன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானம் போன்ற பகுதிகளில் ஆங்காங்கே வெண்மை நிறத்தில் பனி கொட்டிக் கிடந்தது.

அதிகாலை நேரங்களில் கேரட் தோட்டத்திற்கு சென்ற தொழிலாளர்கள் குளிரை தாங்க முடியாமல் தீ மூட்டி குளிர் காய்ந்துக் கொண்டே பணியை மேற்கொண்டனர். அதேபோல், கடும் உறைப்பனியால் இன்று காலை பணிக்கு சென்ற தேயிலை ேதாட்ட தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாவட்டம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், முன்னதாகவே உறைபனி விழத்துவங்கி உள்ளதால் தேயிலை மற்றும் காய்கறி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ஊட்டியில் இன்று காலை  அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்சம் 6 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

Related Stories:

>