×

பீகார் பேரவை தேர்தல் முடிவின் துளிகள்

பீகார் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்தல் ஆணையம் மொத்தமுள்ள 243 இடங்களின் முடிவுகளை அறிவித்துள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான பெரும்பான்மையைப் பெற்றது. பீகார் மகாபந்தன் கூட்டணியானது சிறிய வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தது.

* தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 இடங்களும், மகாபந்தன் கூட்டணிக்கு 110 இடங்களும், மற்றவர்களுக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் அதிகபட்சமாக 75 இடங்களை பிடித்தது. இரண்டாவது இடத்தில் பாஜக 74 இடங்களை பிடித்துள்ளது. ஒவைசியின் கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களை வென்றது. சிராக் பஸ்வானின் கட்சி 143 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தை மட்டுமே வென்றது.

* இந்த தேர்தலில் சிபிஐ (எம்எல்) 12 இடங்களை கைப்பற்றியது. மற்ற இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா இரண்டு இடங்கள் கிடைத்தன. இந்த வகையில் இடதுசாரி கட்சிகள் 16 இடங்களில் வென்றன.

* இன்று மாலை, டெல்லியின் பாஜக தலைமையகத்தில் பீகார் வெற்றிக் கொண்டாட்டம் நடக்கும் என்றும், இதில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

* முதல்வர் நிதிஷ் குமார் நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்பார் என்று கூறினாலும், பாஜக அதிக இடங்களை கைப்பற்றியதால், முதல்வர் பதவி குறித்து முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

* நிதிஷ் குமார் அமைச்சரவையில் இருந்த ஒன்பது அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர். இதில் ஜேடியுவின் 7 அமைச்சர்களும், பாஜகவின் இரண்டு அமைச்சர்களும் அடங்கும். ஜேடியுவின் ஷைலேஷ்குமார், குர்ஷித் ஆலம், கிருஷ்ணானந்தன் வர்மா, ஜெய் குமார் சிங், லக்ஷ்மேஷ்வர் ராய், ராம்சேவாக் சிங் மற்றும் சந்தோஷ் நிரலா ஆகியோர் தோல்வியடைந்தனர். பாஜகவின் சுரேஷ்குமார் சர்மா மற்றும் பிரிஜ் கிஷோர் பிண்ட் ஆகியோர் தோற்றனர்.

* கடந்த ​2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (எல்ஜேபி உட்பட) 40 இடங்களில் 39 இடங்களையும், 53 சதவீத வாக்குகளையும் பெற்றது. தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, என்டிஏ (பிஜேபி, ஜேடியு, எச்ஐஎம் மற்றும் விஐபி) ஆகியவற்றின் மொத்த வாக்கு சதவீதம் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணிக்கு சுமார் 37 சதவீத வாக்குகள் கிடைத்தன. மக்களவைத் தேர்தலில், ஜேடியுவின் வாக்கு சதவீதம் 21.81 ஆகவும், சட்டமன்றத் தேர்தலில் அது வெறும் 15 சதவீதமாகவும் இருந்தது. பொதுத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 23 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

* பீகார் சட்டமன்றத் தேர்தலில் இதுவரை ஏழு லட்சம் வாக்காளர்கள் ‘நோட்டா’ (மேற்கண்டவற்றில் எதுவுமில்லை) பட்டனை தேர்வு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இதுவரை 6,89,135 பேர் அல்லது 1.69 சதவீத வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கவில்லை.

* சிராக் பஸ்வான் கட்சி தலித் வாக்குகளை பிரித்ததும், ஓவைசி கட்சி இஸ்லாமிய வாக்குகளை பிரித்ததும்தான், மகாபந்தன் கூட்டணியின் வெற்றியை பாதித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags : Bihar Assembly , Bihar Assembly election results drops
× RELATED பீகார் மேலவை தேர்தல் முதல்வர் நிதிஷ் வேட்பு மனு தாக்கல்