×

சட்டநாதபுரத்தில் உயர்கோபுர மின் விளக்கு பழுதால் இருளில் மூழ்கிய ரவுண்டானா: பொதுமக்கள் அவதி

சீர்காழி: சீர்காழி அருகே சட்டநாதபுரம் ரவுண்டானாவில் பழுதடைந்துள்ள உயர்கோபுர மின் விளக்கை சரி செய்யக் கோரி  இந்து மக்கள் கட்சி கோரிககை விடுத்துள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஞானசேகரன் ஆகியோர்  சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள ரவுண்டானா நான்கு வழிச்சாலைகளை பிரிக்கும் ஓர் முக்கியமான மையமாகும்.  கிழக்கே பூம்புகார், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையும் உள்ளது. மேற்கே சென்னை  செல்லும் புறவழிச்சாலையும், தெற்கே மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி செல்லும் நெடுஞ்சாலையும், வடக்கே  சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி செல்லும் நெடுஞ்சாலையும் இந்த ரவுண்டானாவை மையமாக வைத்து பிரிந்து செல்கின்றன.  தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இதன் வழியாக சென்று வருகின்றன.

சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு  ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும், வெளியூர் பேருந்துகளும் நின்று செல்லும் பேருந்து நிறுத்தங்களும் இங்குள்ளது. மேலும்  தொலைதூரப் பேருந்துகள் குறிப்பாக சென்னையிலிருந்து வரும் பேருந்துகள் சீர்காழி நகருக்குள் வராமல் சட்டநாதபுரம்  ரவுண்டானாவில் பயணிகளை இறக்கி செல்வது வழக்கம். பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர  மின் விளக்குகள் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பழுதடைந்துள்ளதால் அந்த பகுதியே இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவு  நேரங்களில் விபத்துகள் அதிகம் நடக்க இது வாய்ப்பாக அமைவதோடு சங்கிலி பறிப்பு போன்ற திருட்டு சம்பவங்கள் நடக்கவும்  காரணமாக உள்ளது.

வெளியூர்களிலிருந்து நள்ளிரவில் இறக்கி விடப்படும் பயணிகள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள்,  முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியூர்களில் பணிபுரியும் பலர் ஊருக்கு திரும்பும் சூழலில் ரவுண்டானா இருளில் மூழ்கி கிடப்பது  பலவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற காரணமாகி விடுமோ என அச்சமாக உள்ளது. எனவே, உடனடியாக  சட்டநாதபுரம் ரவுண்டானாவில் பழுதடைந்துள்ள உயர் மின் கோபுர விளக்குகளை சரி செய்திட வேண்டும். இவ்வாறு அந்த  மனுவில் கூறியுள்ளனர்.



Tags : Roundabout ,tower failure ,suffering , In Sattanathapuram Roundabout plunged into darkness due to tower light failure: Public suffering
× RELATED புதிய சுற்று வட்டச்சாலைக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் மனு