×

குமரி மாவட்டத்தில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுமா?: குரல் அற்றவர்களின் குரல்

நாகர்கோவில் :  கால்வாய்கள், வடிகால்களை முறையாக தூர்வாராததால் நாகர்கோவில் மாநகர பகுதியில் ஒரு மணி  நேரம் மழை பெய்தாலே சாலைகளில் வெள்ளம் தேங்கும் நிலை காணப்படுகிறது. மாவட்டத்தில் 62 இடங்கள் வெள்ளம் சூழும்  அபாய பகுதிகளாக தொடர்ந்து விளங்கி வருகின்றன.  தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் மழை பெறும் மாவட்டம் குமரி மாவட்டம் ஆகும். டிசம்பர் வரை  மழைக்காலம் தொடரும். அவ்வப்போது புயல் மழையும் வந்து மாவட்டத்தை வெள்ள அபாயத்தை காட்டி திக்குமுக்காட வைக்கிறது.  குமரி மாவட்டத்தில் மழை வெள்ளம் வழிந்தோடும் வகையில் நாகர்கோவில் வழியாக பாயும் பழையாறு, இரணியல் வழியாக பாயும்  வள்ளியாறு, குழித்துறை வழியாக பாயும் தாமிரபரணி ஆறு ஆகியவை உள்ளன. ஆனால் இந்த ஆறுகள் ஆக்ரமிப்புகளாலும்,  முறையாக தூர்வாரப்படாததாலும் மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓட காரணமாக அமைந்து விடுகின்றன.

இந்த ஆறுகளை சென்றடைய வேண்டிய கால்வாய்களும், மழைநீர் ஓடைகளும் தடைபட்டுள்ளதும், அதனை சார்ந்த குளங்கள்  மூடப்பட்டதும் மழை வெள்ளம் ஆங்காங்கே தேங்க காரணமாக அமைந்து விடுகிறது.நாகர்கோவில் நகர பகுதி வழியாக பாயும் பழையாறு தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. ஆகாய தாமரைகளால்  நிறைந்தும், மண் நிரம்பியும், தடுப்பணைகளில் ஷட்டர்கள் உடைந்தும், கால்வாய்களை ஆக்ரமித்து கட்டியுள்ள  கட்டடங்களும் மழை வெள்ளத்திற்கு தடைகளை ஏற்படுத்தி மழைக்காலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.  இதனால் அருகே உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. ஓகி புயல் வேளையில் பழையாற்றில் மழை வெள்ளத்தை  தாங்க முடியாமல் சுசீந்திரம் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. நாகர்கோவில் மாநகர பகுதியில்  அசம்பு ரோடு, ஆராட்டு ரோடு, வடசேரி, மீனாட்சிபுரம், கோட்டார் பகுதிகள் மழை வெள்ளத்தால் அவ்வப்போது சூழப்படுகிறது.  ஒரு மணி நேரம் விடாது மழை பெய்தாலே மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறி விடுகிறது. மாநகர பகுதியில் உள்ள  பல்வேறு வடிகால்கள் மூடப்பட்டும், ஆக்ரமிக்கப்பட்டும் காணப்படுகிறது.

   இதனால் மழை வெள்ளம் வழிந்தோட முடியாமல் சாலைகளில் தேங்கி நிற்கிறது. அசம்பு ரோட்டில் கால்வாய்களில் வெள்ளம்  வழிந்தோட வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டபோதிலும் இங்கு பெருமளவில்  குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதால்  அவை மழைக்காலங்களில் மடைகள் போன்ற அமைப்புகளை அடைத்து விடுகின்றன. இதனால் சாலைகளில் தண்ணீர் பாய்ந்தோட  தொடங்குகிறது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. சாலையோரங்களில் உள்ள வடிகால்களை ஆக்ரமித்து  கட்டிடங்களின் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் வடிகால்களில் பாயாமல் தெருக்களில் தேங்கி  விடுகிறது.அவ்வப்போது ஒரு சில பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டாலும் அவை தண்ணீர் வழிந்தோட வழிகளை  கண்டறியப்படாமல் இருப்பதால் வீடுகளையும், தெருக்களையும் வெள்ளம் சூழ்ந்துவிடுவது வாடிக்கையாக இருந்து  வருகிறது. இதனை போன்று மழையால் ஆற்றில் நீர்மட்டம் உயரும்போது குழித்துறை தாமிபரணி ஆறு கடலுடன் கலக்கின்ற  பகுதிகள், குழித்துறை பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்படுகிறது. பேரிடர் மேலாண்மை நிர்வாகம் குமரி மாவட்டம்  முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்படும் பகுதிகளை பட்டியலிட்டுள்ளது.

மொத்தம் உள்ள 62 இடங்களில் அதிகப்படியாக மழை வெள்ளம் சூழும் பகுதிகள் 21  உள்ளன. இங்கு 5 அடி உயரத்திற்கு மேல்  வெள்ளம் சூழும் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனை போன்று 3 முதல் 5 அடி வரை 8 இடங்களிலும், 2 முதல் மூன்றடி அடி வரை 18 இடங்களிலும், 2 அடி உயரத்திற்கு 15  இடங்களிலும் மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து வருகிறது. மழையின் அளவை பொறுத்து பாதிப்புகளும் இருக்கிறது. மழை  வெள்ளம் சூழும் பகுதிகளில் வசிக்கின்ற மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது ஒருபுறம் இருக்க, தொடர்ந்து அந்த  பகுதியில் மழை வெள்ளம் தேங்காமல் இருக்க  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் திட்டங்கள் ஏதும் இல்லாத  நிலை தொடர்கிறது. இதனால் ஒவ்வொரு மழை காலங்களிலும் மக்கள் பாதிப்புகளை அனுபவிக்கின்றனர்.  எனவே நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகமும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் குமரி மாவட்டம்  மழை வெள்ளத்தின் பிடியில் மக்கள் சிக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகள்
5 அடிக்கு மேல்: பாறைக்கால் மடம், அழிக்கால், துண்டத்தாராவிளை, திக்குறிச்சி, முன்சிறை பார்த்திவபுரம், வாவறை பள்ளிக்கல்,  கோயிக்கல்தோப்பு, வைக்கல்லூர், கோயிக்கவிளாகம், தடிக்காரன்கோணம் புதுநகர், லேபர் காலனி, திருவட்டார் சாரூர், தெற்கு  தெரு, ஆற்றூர் கழுவன்திட்டை, மூவாற்றுமுகம், வாழன்குழி, புளியன்விளை, எருக்கலன்விளை, குளச்சல் கொட்டில்பாடு.

3 முதல் 5 அடி உயரம்: பீமநகரி திருமலைபுரம், தெரிசனங்கோப்பு மண்ணடி, திருப்பதிசாரம் கீழூர், நெசவாளர் காலனி,  பீமநகரி சண்முகபுரம், திற்பரப்பு களியல் ஆற்றின்கரை, மடத்துவிளை.

2 முதல் 3 அடி உயரம்: புத்தேரி ஆனைப்பொத்தை, பாறையடி, நாகர்கோவில் கீழதத்தையார்குளம், மேல தத்தையார்குளம்,  பிள்ளைத்தோப்பு, அருமனை மனசேகரம், வெள்ளாங்கோடு செந்தித்தோப்பு, பாகோடு ஞாறாம்விளை, விளாத்துறையில்  மாராயபுரம், ஒச்சவிளை, கோயிக்கவிளை, பணமுகம், முட்டம், தெரிசனங்கோப்பு, ஞாலம், பேச்சிப்பாறை அணை பகுதிகள்.இவை தவிர புத்தேரி புளியடி காலனி, கீழமணக்குடி, வட்டவிளை, வெள்ளாங்கோடு, பாகோடு, விளாத்துறை, மங்காடு, வாவறை,  பைங்குளம் ஊராட்சி பகுதிகளில் 15 இடங்கள் வரை 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கும் பகுதிகளாக  கண்டறியப்பட்டுள்ளது.

Tags : canals ,district ,Kumari , Kumari Will the canals in the district be dug properly ?: Voice Of the destitute The voice
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...