×

திருவண்ணாமலை அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது தமிழகத்தின் முதல் வழிபாட்டு சிலை ‘தாய் தெய்வம்’

* பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்
* தொன்மை, வரலாறு, பண்பாட்டு தளத்தில் ஆய்வு
* தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கோரிக்கை

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருகேயுள்ள, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழகத்தின் முதல்   வழிபாட்டு சிலையான ‘தாய் தெய்வம்’ கற்சிலையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க தமிழக அரசுக்கு மாவட்ட  நிர்வாகம் முன்மொழிவு அறிக்கை அனுப்பியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிகள் உள்ளன. அக்கால மக்கள் இறந்த பின்பு எழுப்பும் நினைவு சின்னங்களில் இருந்து,  அவர்களின் வாழ்க்கை முறை, அணிகலன்கள், புழங்கு பொருட்கள், வழிபாடு உள்ளிட்ட பல வரலாற்று தகவல்கள் கிடைக்கின்றன.அதன்படி, வரலாற்று சிறப்பு மிக்க, மனித உருவத்தையொத்த சிலை ஒன்று, தண்டராம்பட்டு தாலுகா, தா.மோட்டூர் கிராமத்தில்  உள்ளது. இந்த சிலையை பாதுகாக்கவும், அதன் வரலாற்று சிறப்பை வெளி கொண்டுவந்து, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக  அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்மொழிவு அறிக்கை  அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடி அடுத்த தென்பெண்ணையாற்றின் தென்பகுதியில்  அமைந்துள்ளது டி.வேலூர் மதுரா தா.மோட்டூர் கிராமம். இந்த கிராமத்தின் மலைக்கு செல்லும் வழியில் இருந்த 60க்கும் மேற்பட்ட  கல்வட்டங்களில், பெரும்பாலானவை காலப்போக்கில் அழிந்துவிட்டன.தற்போதுள்ள கல்வட்டங்களில் ஒன்றில்,  தனித்துவமான சிலையாக தாய் தெய்வக்கல் அமைந்திருக்கிறது. இந்த சிலை மனித உருவத்தை போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. ஆனால், ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு அல்லது  தெளிவான அங்க அமைப்புகள் இல்லை. அமர்ந்த நிலையில், இரண்டு கால்களும் நீண்டபடியும், கையை நீட்டியபடியும்  அமைந்துள்ளன. இதனை, மனித உருவவொத்த சிலை என தொல்லியல் ஆய்வாளர்கள்  உறுதிப்படுத்தியுள்ளனர்.தமிழகத்தில், செஞ்சிக்கு அருகே உடையார்நத்தத்தில் மனித உருவொத்த சிலை உள்ளது.  ஆதிச்சநல்லூர் அகழ்வாய்விலும் செம்பினாலான மனித உருவொத்த சிலை கண்டெடுக்கப்பட்டன. மேலும், ஆந்திர மாநிலம்  கிருஷ்ணா மாவட்டம் லிங்கானா, வாரங்கல் மாவட்டம் தோட்டகுட்டா, சித்தூர் அருகேயுள்ள மிடிமில்லா, கர்நாடக மாநிலத்தில்  பெல்லாரி மாவட்டம் குமாதி ஆகிய இடங்களில், மனித உருவத்தை போன்ற சிலைகள் காணப்படுகின்றன.

மேலும், ஜெர்மன், பிரான்ஸ் நாட்டிலும் இதுபோன்ற சிலைகள் காணப்படுகின்றன. இது போன்ற இடங்களில் கிடைத்த சிலைகளில்,  மனித உருவம், உடல் உறுப்பு பாகங்கள் இல்லாதது, நீண்ட தோள் பகுதி, தலைப்பகுதி முழுமையாக இல்லாதது ஆண், பெண்  வேறுபாடு காண முடியாதது. வணங்கக்தக்க அமைப்பை பெற்றிருத்தல் போன்ற சில பொதுவான அமைப்புகள்  காணப்படுகிறது.ஆனால், தா.மோட்டூரில் உள்ள தாய் தெய்வச்சிலையின் தலைப்பகுதி மிகக்குன்றியும், தோள்பகுதி நீண்டும்,  அமர்ந்த நிலையில் இரண்டு கால்களை வைத்துள்ளபடி அமைந்துள்ளது. இதன் உயரம் 3.25 மீட்டர். அகலம் 3.25 மீட்டர்.  கற்பலகையின் தடிமன் 10 செமீ.இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் பி.நரசிம்மையா, கடந்த 1978-1979ம் ஆண்டுகளில் இந்த பகுதியில் உள்ள  கல்வட்டங்களை அகழ்வாய்வு செய்தார். அதில், மண்கலன்கள், வழவழப்பான கறுப்பு, சிவப்பு மண் கலன்கள், தாங்கிகள்,  கிண்ணங்கள் கிடைத்தன. ஈமப்பேழையில் உள்ள பகுதியில், மனித எலும்புகளும் காணப்பட்டன. அதன்பிறகு, பல்வேறு  அறிஞர்கள் இந்த பகுதியை ஆய்வு செய்துள்ளனர்.

பெருங்கற்கால மக்கள், இறந்தவர்களை தாழியில் அடைத்து புதைக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். புதைத்த இடத்தில்,  வட்டமான கற்களை அமைக்கும் வழக்கமும் இருந்தது. வட்ட வடிவ கல் அமைப்புகள் எளிதில் அடையாளம் காண முடியும்.பெருங்கற்கால மக்களின் இந்த வழக்கம் தென்னிந்தியா முழுவதும் சில வேறுபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த  மக்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த வழக்கப்படி, தா.மோட்டூர் கல்வட்டங்களில் வழிபடுவதற்கான அமைப்புடைய சிலையை  நிறுவியுள்ளனர்.அந்த பகுதியில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் பண்பாடாக இருந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக  கொற்றவை வழிபாடும், அய்யனார் வழிபாடும் தோன்றியிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்குள்ள மக்கள், தாய் தெய்வம் என இதனை வழிபடுகின்றனர். ஆண், பெண் என இந்த சிலையை வேறுபடுத்த  முடியாவிட்டாலும்,  மக்கள் மனதில் பெண் தெய்வமாகவே கருதப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா  நடத்துகின்றனர். இந்த சிலையில் தலை இல்லாததற்கு, பல கதையாடல்கள் சொல்லப்படுகிறது.உடையார்நந்தத்தில்  உள்ள சிலை உள்ளிட்ட மற்ற பகுதிகளில் கிடைக்கப்பெற்ற எந்த சிலைகளும் ெதாடர்ந்து வழிபாட்டில் இல்லை.

பெருங்கற்கால  பண்பாட்டில் உருவான தா.மோட்டூர் சிலை, தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழகத்தின் முதல் வழிபாட்டு சிலை என்பதும்,  தொடர்ந்து 3 ஆயிரம் ஆண்டுகளாக வழிபாட்டில் உள்ளதும் சிறப்புக்குரியது. இந்த சிறப்பு இதுவரை வேறு எங்கும்  கண்டறியப்படவில்லை.சிந்து சமவெளி பண்பாட்டுக்கு பிறகு கிடைத்துள்ள சிலைகளில், இந்த வகையான மனித உருவொத்த  சிலையே காலத்தால் மூத்த சிலை என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தொன்மை, வரலாறு மற்றும் பண்பாட்டு தளத்தில் இந்த  சிலையை ஆழ்ந்து ஆய்வு செய்தால், தமிழகத்தின் பல்வேறு சிறப்புகள் வெளிவரும்.இந்த சிலையின் உயரம் 3.25 மீட்டர். ஆனால், தடிமன் 10 செமீ மட்டுமே. இதன் தடிமன் அதன் உயரத்துடன் கணக்கிடும் போது  மிகக்குறைந்த அளவாக உள்ளது. காலப்போக்கில், காற்று அரிப்பினால், பிற பாதிப்புகளால் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கிடைத்துள்ள தனித்துவமான இந்த சிலை, தற்போது எந்த துறையின் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஊர்  மக்களிடமும் இதன் வரலாற்றை பற்றிய விழிப்புணர்வும் இல்லை. எனவே, தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவு  சின்னமாக அறிவித்தால், இந்த சிலையை பார்வையிட பல நாடுகளில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆய்வாளர்கள்,  அறிஞர் வருவார்கள். இந்த பகுதி சுற்றுலா தலமாக மாறும்.

செங்கம், தண்டராம்பட்டு பகுதியில் தொன்மையான நடுகற்கள், பாறைகீறல்கள் உள்ளது. சின்னியம்பேட்டை,  கீழ்ராவந்தவாடி குளம் போன்றவை வரலாற்று ஆய்வாளர்களை பெரிதும் ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது. எனவே, இந்த  சிலையால் மேலும் இப்பகுதி புகழ்பெறும். வரலாற்று சிறப்பு மிக்க மண்டலமாக உருவாகும். எனவே, தா.மோட்டூர் தாய்  தெய்வக்கல் மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : idol ,Tamil Nadu ,Thiruvannamalai , Near Thiruvannamalai, the first idol of Tamil Nadu, 'Thai Deivam', is 3,000 years old.
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...