திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் என்ன சிரமம்?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நவம்பர் இறுதி வரை மெரினா கடற்கரையை திறக்க வாய்ப்பில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்திருக்கிறது. இதனை கண்டித்து உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது. தமிழக அரசு காலம் தாழ்த்தினால் மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது  தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை என்பது நீதிபதிகள் வினித் கோத்தாரி, ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், மெரினாவை சுத்தப்படுத்துவதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.

மேலும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டதின்படி, சென்னை மாநகராட்சி ஆணையரும், காவல் ஆணையரும் மெரினாவில் திடீர் சோதனைகள் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டரை திறக்க தனி நீதிபதி தடைவிதித்திருப்பதால் அந்த டெண்டரை திறக்க இயலவில்லை எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நவம்பர் இறுதி வரை மெரினா கடற்கரையை திறக்க வாய்ப்பில்லை என்று தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், மெரினாவை திறப்பதில் என்ன சிரமம்? தமிழக அரசு காலம் தாழ்த்தினால் மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, தனி நீதிபதி முன் உள்ள வழக்கினை இந்த வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>