×

ரோகித் ஷர்மா அதிரடி ஆட்டம்: 5வது முறையாக மும்பை சாம்பியன்

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 பைனலில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த செப். 19ம் தேதி தொடங்கிய ஐபிஎல் டி20 தொடர் 13வது சீசனின் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோதியது. ஏற்கனவே 4 முறை கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ள மும்பை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது.

அதே சமயம், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணியும் கோப்பையை முத்தமிட வரிந்துகட்டியது. எனினும், டெல்லியுடன் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை அணி 4 வெற்றியை வசப்படுத்தி இருந்ததால், அந்த அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் இந்த போட்டியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மும்பை அணியில் ராகுல் சாஹருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இடம் பெற்றார். அதிர்ச்சி தொடக்கம்: அஸ்டாய்னிஸ், தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர்.

போல்ட் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் டி காக் வசம் கேட்ச் கொடுத்து ஸ்டாய்னிஸ் டக் அவுட்டானார். அடுத்து வந்த ரகானேவும் (2 ரன்) அதே வழியை பின்பற்றி பெவிலியன் திரும்ப. டெல்லி 2.4 ஓவரில் 16 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. 3 பவுண்டரிகள் விளாசி நம்பிக்கை கொடுத்த தவான் 15 ரன் எடுத்த நிலையில், ஜெயந்த் பந்துவீச்சில் கிளீன் போல்டானது டெல்லி அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. அந்த அணி 3.3 ஓவரில் 22 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற, கேப்டன் ஷ்ரேயாஸ் - ரிஷப் பன்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. ஷ்ரேயாஸ் நம்பிக்கையுடன் அடித்து விளையாடி ஸ்கோரை உயர்த்த முயன்றார்.

நல்ல பார்ட்னர்ஷிப்: பன்ட் தன் பங்குக்கு 2 சிக்சர்களை பறக்கவிட, டெல்லி அணி 10 ஓவரில் 75 ரன் என்ற கவுரவமான நிலையை எட்டியது. இருவரும் 38 பந்தில் 50 ரன் சேர்த்தனர். இந்த ஜோடியின் உறுதியான ஆட்டத்தால் கேப்பிடல்ஸ் ஸ்கோர் சீராக உயர்ந்து 13 ஓவரில் 100 ரன் என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. கோல்டர் நைல் வீசிய 15வது ஓவரின் 3வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பன்ட், இந்த சீசனில் தனது முதல் அரை சதத்தை நிறைவு செய்தார். அவர் 56 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கோல்டர் நைல் பந்துவீச்சில் ஹர்திக் வசம் பிடிபட்டார். ஷ்ரேயாஸ் - பன்ட் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஷ்ரேயாஸ் உடன் ஹெட்மயர் இணைந்தார். ஷ்ரேயாஸ் 40 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதம் அடித்தார். ஹெட்மயர் 5 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் கோல்டர் நைல் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி பந்தில் ரபாடா (0) ரன் அவுட்டாக, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் 65 ரன்னுடன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை பந்துவீச்சில் போல்ட் 3, கோல்டர் நைல் 2, ஜெயந்த் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 157 ரன் எடுத்தால் கோப்பையை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. கேப்டன் ரோகித், டி காக் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி 4 ஓவரில் 45 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது.

டி காக் 20 ரன் (12 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஸ்டாய்னிஸ் வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார். அடுத்து ரோகித் - சூரியகுமார் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தனர். சூரியகுமார் 19 ரன் எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அதிரடியை தொடர்ந்த ரோகித் 36 பந்தில் அரை சதம் அடித்தார். ரோகித் - இஷான் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தது. ரோகித் 68 ரன் (51 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி நார்ட்ஜ் பந்துவீச்சில் லலித் வசம் பிடிபட்டார். போலார்டு 9, ஹர்திக் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

மும்பை அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து வென்றது. இஷான் 33 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), குருணல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டதுடன் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.



Tags : Rohit Sharma Action Match: Mumbai Champion , Rohit Sharma Action Match: Mumbai Champion for the 5th time
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு