×

காஞ்சி, செங்கை கலெக்டர்களுக்கு கொரோனா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு கலெக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள், தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த மகேஸ்வரி ரவிக்குமார், பணியிடம் மாற்றப்பட்டு, கடந்த 29ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். தொடர்ந்து மாவட்டத்தில் வரதராஜபுரம், படப்பை, ஆதனூர் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் வெள்ளத் தடுப்பு பணிகளை கடந்த வாரம் ஆய்வு செய்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அண்ணா குடியிருப்பு பகுதியில், நகராட்சி சார்பில் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2 கோடியில் சாலை அமைக்கும் பணியைதுவக்கி வைத்தார்.

அப்போது, அதிமுக நிர்வாகிகள், அனைத்து துறை அலுவலர்களும் மரியாதை நிமித்தமாக சால்வை வழங்கி வரவேற்றனர். சமூக இடைவெளியின்றி அந்த துவக்க விழா நடந்தது. இதனை கண்ட அரசு அதிகாரிகள், பலமுறை எடுத்துரைத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று காலை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு, பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். ஏற்கனவே, இங்கு கலெக்டராக பணியாற்றிய பொன்னையாவும், கொரோனா வால் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் மருத்துவ சிகிச்சைக்கு பின் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு: கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கலெக்டராக ஜான்லூயிஸ் பதவியேற்றார். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று, தடுப்பு பணிகளை பார்வையிட்டார். அதேபோல் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்றார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் கலெக்டர் ஜான்லூயிசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா உறுதியானது.

இதைதொடர்ந்து, சென்னை கிண்டி கிங்ஸ் இன்டிடியூட்டில் கலெக்டர் ஜான்லூயிஸ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று, மீண்டும் பணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,Kanchi ,Chengai Collectors , Corona for Kanchi and Chengai Collectors
× RELATED மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி