×

உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

மதுரை: மதுரை உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். மதுரை உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலராக சோமசுந்தரம் உள்ளார். இவரை சில தினங்களுக்கு முன் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தமிழக முதல்வரின் செயலர் ஒருவரின் பெயரைக் கூறி, தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறியுள்ளார். பின்னர், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் குளறுபடிகள் நடப்பதாகவும் அது தொடர்பாக ஆடிட்டிங் செய்ய மதுரை வந்ததாகவும் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகார தோரணையில் கேட்டுள்ளார்.

மீண்டும் 2  நாட்களுக்கு முன், ஒரு ஓட்டலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த சோமசுந்தரத்திற்கு, மர்ம நபரிடமிருந்து போன் வந்தது. அப்போது, அருகிலிருந்த ஒரு நபர்தான் தன்னுடன் போனில் பேசுகிறார் என்பது தெரிந்தது. உடனே அலுவலர் சோமசுந்தரம், அந்த நபரை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அந்த நபர் தனக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் ஓரிரு நாட்கள் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதையடுத்து அந்த நபரை தனது வீட்டிற்கே அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். மேலும், அவரை செல்போனில் போட்டோ எடுத்த சோமசுந்தரம், அதை சுகாதாரத்துறை செயலருக்கும், முன்னாள் கலெக்டர் வினய்க்கும் அனுப்பி, இவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருவரும் இப்படி ஒரு ஐஏஎஸ் அதிகாரியே இல்லை என்று கூறவே, தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. நேற்று முன்தினம் காலை போலீசார், சோமசுந்தரத்தின் வீட்டிற்கு வந்து, மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், அந்த நபர், மதுரை மாவட்டம், சோழவந்தான் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பது தெரிந்தது. அவரிடமிருந்த போலி கால்நடை மருத்துவருக்கான அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Tags : IAS ,officer ,food security officer , Fake IAS officer arrested for intimidating food security officer
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு