கேளம்பாக்கம் அருகே பயங்கரம்: சொத்து தகராறில் மாமா வெட்டி கொலை: மைத்துனர் மகன் உள்பட 2 பேருக்கு வலை

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே, சொத்து தகராறு காரமணாக மாமா சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், மைத்துனர் மகன் உள்பட 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். கேளம்பாக்கம் அடுத்த தையூர் கோமான் நகரை சேர்ந்தவர் சாமுவேல் (55). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மனைப்பிரிவில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சிறிய அளவில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மரகதத்தின் தம்பி கோவிந்தசாமி. இவரது மகன் விமல்ராஜ். கோவிந்தசாமி குடும்பத்துக்கும், சாமுவேல் குடும்பத்துக்கும் பூர்வீக சொத்தை பிரித்து கொள்வதில் தகராறு ஆனது. இதில், முன் விரோதம் ஏற்பட்டு இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை இல்லாமல் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் சாமுவேல், வேலை பார்க்கும் தனியார் மனைப்பிரிவுக்கு புறப்பட்டார். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 பேர், சாமுவேலை பின்பக்கமாக அரிவாளால் வெட்டினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சாமுவேலின் முகம், கை, தலை உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி விட்டு அவர்கள் தப்பினர். சாமுவேலின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள், மனைப்பிரிவு பகுதியில் சாமுவேல் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் ஓடி வந்து, கதறி அழுதனர்.

தகவலறிந்து, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மரகதத்தின் தம்பி கோவிந்தசாமியின் மகன் விமல்ராஜ் உள்பட 2 பேர், சாமுவேலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை, வலைவீசி தேடி வருகின்றனர்.

தடுக்க முடியாத கஞ்சா விற்பனை

ஓஎம்ஆர் சாலையில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை களை கட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால், பல இளைஞர்கள் கல்லூரிக்கு செல்லாமலும், வேலைக்கு செல்லாமலும் ஊரைச்சுற்றி வருகின்றனர். அவர்களை குறி வைத்து, இந்த கஞ்சா விற்பனை நடக்கிறது.

இந்த கொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் வாலிபரும், கடந்த சில மாதங்களாக கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும், உள்ளூர் வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. கேளம்பாக்கம் மற்றும் தாழம்பூர் போலீசார் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கஞ்சா விற்பனையை தடுக்க இயலவில்லை என்பதே உண்மை.

Related Stories:

>