1,112 திரையரங்குகள் உள்ள நிலையில் தமிழகத்தில் 300 தியேட்டர்களே திறப்பு: குறைந்த அளவிலே பார்வையாளர்கள் வருகை

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச்  16ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த மாதம் மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து நவம்பர் 10ம் தேதி முதல்  தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான  வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதன்படி, தியேட்டர்களில் 50  சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தமிழகம்  முழுவதும் உள்ள 1,112  தியேட்டர்கள் இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தியேட்டரில் படங்களை ஒளிபரப்புவதற்கான விபிஎப் கட்டணத்தை இனி நாங்கள் செலுத்த முடியாது.

தியேட்டர் அதிபர்களே செலுத்த வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதை தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை. இதனால் புதிய   படங்கள் திரையிடப்படாது என தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். புதிய படங்கள் வெளியிடாதவரை தியேட்டர்களும் திறக்க மாட்டோம். ஏற்கனவே ஓடிய படங்களை வைத்து தியேட்டர் திறக்க விரும்புகிறவர்கள் திறக்கலாம் என தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்தது. இதன் காரணமாகவும் கொரோனா பீதியால் மற்ற மாநிலங்களில் தியேட்டர்களில் கூட்டம் வராததாலும் 1,112 தியேட்டர்களில் 300 தியேட்டர்கள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டன.   அந்த தியேட்டர்களில் லாக்டவுனுக்கு முன் வெளியான தாராள பிரபு, ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும்  கொள்ளையடித்தால் ஆகிய   படங்களை மீண்டும் ரிலீஸ் செய்தனர்.

கூட்டம் இல்லை

சென்னையில் நேற்று தியேட்டர்கள் திறந்ததும் பகல் 12 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அப்போது படத்தை பார்க்க 20 முதல் 25 பேர் வரை மட்டுமே வந்திருந்தனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் இதே நிலைதான் காணப்பட்டது. மதியம் மற்றும் மாலை காட்சிகளிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் 20 பேர் வரைதான் இருந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு செல்ல அச்சப்படுவதால் படங்களை பார்க்க கூட்டம் வரவில்லை.

மாஸ்க் அணியாத நடிகைக்கு அபராதம்:

கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராததால் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மரம்கொத்தி, நீயும் ஞானும், ஸ்ர்ண கடுவா, சில்ரன்ஸ் பார்க் உள்பட பல படங்களில் பூஜிதா மேனன் நடித்துள்ளார். அவர் கூறியதாவது: மாஸ்க் அணியாமல் வெளியில் நடமாடினேன், திடீரென அதிகாரிகள் முன்னால் வந்து 200 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றார்கள். பேசி சமாளித்து பார்த்தேன். அவர்கள் கண்டிப்புடன் இருந்ததால் அபராதம் ரூ.200 கட்டினேன். தயவு செய்து மாஸ்க் அணிந்து செல்லுங்கள். நம்மால் மற்றவர்கள் பாதிக்க கூடாது என்றார்.

2 வாரத்துக்கு விபிஎப் கட்டணம் இல்லை தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸ்

தியேட்டரில் படம் ஒளிபரப்புவதற்கான விபிஎப் கட்டணத்தை யார் கட்டுவது என்பது தொடர்பான பிரச்னையில் புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில் திரைப்படத் துறையின் நலன் கருதியும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் 2 வாரங்களுக்கு விபிஎப் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று க்யூப் டிஜிட்டல் நிறுவனம் அறிவித்தது. இதை ெதாடர்ந்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், ‘திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடத்தான். விபிஎப் கட்டணம் தொடர்பாக எங்கள் கருத்தை தெரிவித்திருந்த நிலையில், டிஜிட்டல் புரொஜக்‌ஷன் நிறுவனம் 2 வாரங்களுக்கு கட்டணம் இல்லை என்று அறிவித்திருக்கிறது.

2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு அடுத்து வரும் 2 வாரங்களுக்கு புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். அதே நேரத்தில் விபிஎப் கட்டணத்தை கட்டுவதில்லை என்கிற எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள பிஸ்கோத், இரண்டாம் குத்து, எம்.ஜி.ஆர் மகன், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் வருகிற 13ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

Related Stories:

>