×

தேர்தல் முறைகேடு பற்றி சிறு ஆதாரம் இருந்தாலும் போதும் அமெரிக்கா முழுவதும் வழக்கு போடுங்கள்: அரசு வழக்கறிஞர்களுக்கு அட்டர்னி ஜெனரல் அதிரடி உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடு தொடர்பாக சிறு துரும்பு ஆதாரம் இருந்தாலும் அதை வைத்து வழக்கு தொடர வேண்டுமென டிரம்ப் அரசின் தலைமை வழக்கறிஞரான (அட்டர்னி ஜெனரல்) வில்லியம் பார், அரசு வக்கீல்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், அமெரிக்கா முழுவதும் பல வழக்குகள் தொடரப்பட உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் பெரும்பான்மைக்கு தேவையான 270க்கும் மேற்பட்ட எலக்டோரல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆளும் குடியரசு கட்சி வேட்பாளரும் அதிபருமான டிரம்ப் தோல்வியை தழுவி உள்ளார்.

ஒருபுறம் பிடென் பதவியேற்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் நிலையில், டிரம்ப் தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள மறுக்கிறார். தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையிலும் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். மேலும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, தேர்தலையே செல்லுபடியாகாததாக மாற்ற டிரம்ப் தரப்பு ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே, பென்சில்வேனியா உச்ச நீதிமன்றம் உட்பட 5 நீதிமன்றங்களில் டிரம்ப் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், டிரம்ப் அரசின் அட்டர்னி ஜெனரலான வில்லியம் பார், அரசு வக்கீல்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ‘ஒவ்வொரு மாகாணத்திலும், தேர்தல் முறைகேடு தொடர்பான சிறு ஆதாரம் கிடைத்தாலும் கூட அதை வைத்து வழக்கு தொடர வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து அரசு வக்கீல்கள் தேர்தல் முறைகேடு தொடர்பான ஆய்வில் களமிறங்கி உள்ளனர். வாக்கு எண்ணிக்கை, வாக்குப்பதிவு நேரம் முடிந்து வாக்களித்ததற்கான ஆதாரங்கள், தபால் ஓட்டுகள் வந்து சேர்ந்த நேரம் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
இதன் மூலம், அமெரிக்கா முழுவதும் வழக்குகள் தொடரப்பட உள்ளன. தபால் வாக்குகளை எண்ணி முடிக்க இம்மாதம் இறுதிவரை ஆகிவிடும். அதன்பிறகு தான் இறுதி முடிவு குறித்து தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவார்கள். எனவே,  அடுத்த மாதம் 8ம் தேதி வரை தேர்தல் பிரச்னை குறித்து வழக்கு தொடர முடியும். டிசம்பர் 14ம் தேதி எலக்ட்ரோல் குழுவினர் கூடி வாக்களித்து முறைப்படி அதிபரை தேர்வு செய்வார்கள்.

அதற்குள் வழக்கு மேல் வழக்கு போட்டு, பிடெனை பதவியேற்க விடாமல் செய்வதே டிரம்ப் தரப்பின் நோக்கமாக உள்ளது. இதற்கிடையே, குடியரசு கட்சியை சேர்ந்த 10 அட்டர்னி ஜெனரல்கள், பென்சில்வேனியா உச்ச நீதிமன்றத்திற்கு ஆலோசனை தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடந்த 3ம் தேதி இரவு 8 மணியுடன் வாக்கு பதிவு நேரம் முடிந்தாலும், அதன் பிறகும் 3 நாட்கள் கழித்தும் கூட வந்த தபால் ஓட்டுகள் ஏற்கப்பட்டதாக டிரம்ப் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், காலம் தாழ்த்தி கொண்டு வரப்பட்ட தபால் ஓட்டுகளை மட்டும் தனியாக பிரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக 10 அட்டர்னி ஜெனரல்கள் அனுப்பிய ஆலோசனையில், ‘தாமதமாக வந்த வாக்குச்சீட்டுகளை ஏற்பது அரசியலமைப்பிற்கு எதிரானது. இதன் மூலம், நிறைய மோசடிகள் நடக்கும். எனவே, சட்ட விரோதமாக போடப்பட்ட வழக்குகளை எண்ண தடை விதிக்க வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளனர்.

இப்படி டிரம்ப் தரப்பு வழக்கு, விசாரணை என முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், பிடென் தரப்பில் அரியணை ஏறுவதற்கான ஆயத்த பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதுவும், டிரம்ப் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் மெக்னானி அளித்த பேட்டியில், ‘‘தேர்தல் இன்னும் முடியவில்லை. இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது. நேர்மையான, துல்லியமான வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான நடவடிக்கையை தொடங்கி இருக்கிறோம். அனைத்து அமெரிக்கர்களின் உரிமைக்காக போராடுவோம்,’’ என்றார். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்
தேர்தலில் தோற்றதால் இன்னும் 70 நாட்களே பதவியில் இருக்கப் போகும் டிரம்ப், தனது கடைசி கட்ட அதிரடிகளை நேற்று தொடங்கினார். திடீரென பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரை அப்பதவியில் இருந்து நீக்கினார். இது குறித்து டிவிட்டரில் அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், ‘தேசிய தீவிரவாத தடுப்பு மைய இயக்குநர் கிறிஸ்டோபர் சி மில்லர், பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை வகிப்பார்,’ என கூறி உள்ளார். சமீபத்தில் இந்தியா உடனான 2+2 பேச்சுவார்த்தையில் எஸ்பர் பங்கேற்றார்.

இவரை போலவே, இன்னும் சிலரை அமைச்சரவையில் இருந்து டிரம்ப் கழற்றிவிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், செய்தி சேனல் ஒன்றுக்கு எஸ்பர் அளித்த பேட்டியில், ‘டிரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் நபராக நான் இருக்க மாட்டேன்,’ என்றார். மேலும், தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மீடியாக்கள் மீது பாய்ச்சல்
தேர்தல் விவகாரத்தில் அமெரிக்க ஊடகங்கள் தனது வெற்றியை தடுக்க முயற்சித்ததாகவும் டிரம்ப் விளாசி உள்ளார். டிவிட்டரில் அவர், ‘பல மீடியாக்கள் நான் பின்தங்கியிருப்பதாக திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த மாகாணங்களில் நான் வென்றேன். பல செய்தி சேனல்கள் தவறாக செய்தியை வெளியிட்டன. அதைப் பற்றி விளக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து அறிவிப்பு வெளியீட்டில் சதி
அமெரிக்காவின் மருந்து நிறுவனமான பைசர் தனது கொரோனா தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து டிவிட் செய்த டிரம்ப், ‘அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும், பைசர் நிறுவனமும் வேண்டுமென்றே கொரோனா மருந்தின் வெற்றியை அறிவிக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். தடுப்பூசியின் வெற்றி எனக்கு வந்து சேரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு தேர்தல் முடிந்து 5 நாட்களுக்குப்பிறகு அறிவித்துள்ளனர். பிடென் அதிபரானால் இன்னும் 4 ஆண்டுகளுக்கு யாருக்கும் மருந்து கிடைக்காது. மருந்து நிர்வாகமும் அனுமதி தராது. லட்சக்கணக்கானோர் சாக வேண்டியதுதான்,’ என சாபமிட்டுள்ளார்.


Tags : United States ,Attorney General , File a lawsuit across the United States even if there is little evidence of electoral fraud: Attorney General orders action against public prosecutors
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்