மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் மிக நல்ல அனுபவம்... நிறைய கற்றுக்கொண்டோம்! மந்தனா உற்சாகம்

ஷார்ஜா: மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் எங்களுக்கு மிக நல்ல அனுபவமாக அமைந்தது, நிறைய கற்றுக்கொண்டோம் என்று சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்ட டிரெய்ல்பிளேசர்ஸ் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கூறியுள்ளார். ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான பைனலில் டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் முதலில் பந்துவீசிய நிலையில், டிரெய்ல்பிளேசர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் மந்தனா 68 ரன் விளாசினார். சூப்பர்நோவாஸ் பந்துவீச்சில் ராதா யாதவ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய சூப்பர்நோவாஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார். டிரெய்ல்பிளேசர்ஸ் தரப்பில் சல்மா 3, தீப்தி 2, சோபி 1 விக்கெட் வீழ்த்தினர்.

இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக மந்தனா, தொடரின் சிறந்த வீராங்கனையாக ராதா யாதவ் விருது பெற்றனர். சாம்பியன் பட்டத்துடன் கோப்பையை தட்டிச் சென்ற டிரெய்ல்பிளேசர்ஸ் கேப்டன் மந்தனா கூறியதாவது: ஆண்டு தொடக்கத்தில் உலக கோப்பை டி20 போட்டியில் விளையாடிய உடனேயே இந்த தொடரில் விளையாடுவதாக இருந்தது. கொரோனாவால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என நினைத்தோம். ஆனால், இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு சிறிது பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சில நெருக்கடிகளை சமாளித்து சிறப்பாகவே விளையாடி இருக்கிறோம். அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

நான் கடைசி வரை களத்தில் நின்றிருக்கலாம் என நினைக்கிறேன். 145 ரன் எடுத்திருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். இந்த ஆடுகளத்தில் 118 ரன்னே பெரிய ஸ்கோர்தான். வெளிநாட்டு வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடியது மிக நல்ல அனுபவமாக அமைந்தது. நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம். குறிப்பாக, இளம் வீராங்கனைகளுக்கு பயனுள்ள தொடராக அமைந்தது. இவ்வாறு மந்தனா கூறியுள்ளார்.

Related Stories:

>