×

தங்கம் விலையில் மாற்றம் சவரனுக்கு ரூ.1,136 அதிரடியாக சரிவு: தீபாவளிக்கு நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,136 குறைந்தது. தீபாவளி நேரத்தில் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. கடந்த 2ம் தேதி ஒரு சவரன் ரூ.38,072, 3ம் தேதி ரூ.38,160, 4ம் தேதி ரூ.38,320, 5ம் தேதி ரூ.38,480, 6ம் தேதி ரூ.38,936, 7ம் தேதி ரூ.39,072க்கும் விற்கப்பட்டது. 9ம் தேதி(நேற்று முன்தினம்) கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,922க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,376க்கும் விற்கப்பட்டது.

ஒரு வாரத்தில் மட்டும் தொடர்ச்சியாக கிராமுக்கு ரூ.152, பவுனுக்கு ரூ.1,216 வரை அதிகரித்தது. தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த நிலையில் நேற்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.156 குறைந்து ஒரு கிராம் ரூ.4,766க்கும், சவரனுக்கு ரூ.1,248 குறைந்து ஒரு சவரன் ரூ.38,128க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை சற்று அதிகரித்தது.

இருந்த போதிலும் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.142 குறைந்து ஒரு கிராம் ரூ.4,780க்கும், சவரனுக்கு ரூ.1136 குறைந்து ஒரு சவரன் ரூ.38,240க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் அதிரடியாக சவரன் ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீபாவளி நேரத்தில் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தங்கம் விலை குறைவை தொடர்ந்து நகைக்கடைகளில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: தங்கம் விலை குறைவுக்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பு. இரண்டாவதாக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு. இதனால் தொழில்துறை சார்ந்த விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தை சார்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யாமல் தொழிற்துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறார்கள். அதன் தாக்கத்தால் தங்கம் விலை குறைந்து வருகிறது. வரும் நாட்களில் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். அது குறையுமா? கூடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : buyers ,Diwali , Gold prices fall sharply to Rs 1,136 per ounce: Jewelery buyers happy for Diwali
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...