×

அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வு: முதல் 3 இடங்களை பெற்று தமிழக மாணவிகள் சாதனை

கோவை: அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வில் முதல் 3 இடங்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் ஆண்டுதோறும் வேளாண் முதுகலை மற்றும் பட்டப்படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களை அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரித்து இந்திய அளவில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க ஊக்கத்தொகையுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்குற்பட்ட கல்லூரிகளில் இருந்து இளங்கலை பயின்ற 300, முதுகலை பயின்ற 200 மாணவ, மாணவிகளும் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலிருந்து 185 இளங்கலை மாணவர்கள் ஊக்கத்தொகையுடன் தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதில், 35 மாணவ, மாணவிகள் கோவை உறுப்புக் கல்லூரிகளிலிருந்தும் 22 மாணவ, மாணவிகள் முறையே தோட்டக்கலைக் கல்லூரி திருச்சி மற்றும் 20 மாணவ, மாணவிகள் பெரியகுளம் கல்லூரிகளிலிருந்தும் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், 42 பேர் தோட்டக்கலைத்துறை மேற்படிப்பு படிக்கவும், 35 பேர் தாவர அறிவியல் படிக்கவும், 24 மாணவர்கள் வேளாண் பூச்சியியல் துறை படிக்கவும் இடம் பெற்றுள்ளனர். இந்த தரவரிசைப் பட்டியலில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த காளீஸ்வரி என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

வேளாண் சமூக அறிவியல் துறையில் பவித்ரா என்ற மாணவி இரண்டாமிடத்தையும், பூஜா சக்திராம் வேளாண் பொறியியல் துறையில் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர். முதுகலை வேளாண் படிப்பிற்கான அகில இந்திய தரவரிசைப்பட்டியலில்  சொர்ணா திறன் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் முதல் இடத்தையும், நயனா வந்தனா தாவர நோயியல் துறையில் முதல் இடத்தையும், சிவக்குமார் தாவர மரபியல் துறையில் மூன்றாமிடத்தையும் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக இடங்களை பெற்றுள்ளனர்.

Tags : India Agricultural Entrance Examination: Achievement ,Tamil Nadu ,places , All India Agricultural Entrance Examination: Achievement of Tamil Nadu students by getting first 3 places
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்...