மாதனூர் ஒன்றியத்தில் அரசு நலத்திட்டங்களுக்கு விவரங்கள் சேகரிப்பதில் அலுவலர்கள் அலட்சியம்: இரவிலும் வருவதாக கிராம மக்கள் புகார்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தின் கீழ் 37 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் புதுவாழ்வு திட்டம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் விவர சேகரிப்பு, மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட அரசு நல திட்டங்களுக்கான மக்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய பிடிஓ தலைமையில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அந்தந்த ஊராட்சிகளில் உள்ள கணக்கெடுப்பு அலுவலர்கள் இந்த பணியை வீடு வீடாக சென்று அதற்கான படிவத்தில் சம்பந்தப்பட்ட குடும்ப தலைவரையோ அல்லது அந்த குடும்ப உறுப்பினர் முன்னிலையில் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆனால், இதில் ஈடுபட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் இந்த விதிமுறையை பின்பற்றாமல் விவரம் சேகரிக்கும் கிராமத்தில் பகல், இரவு பாராமல் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு கிராம மக்களை தங்களது இடத்திற்கு வரவழைக்கின்றனர்.

மேலும், விவரம் தெரிவிக்க வருபவர் அவரது ரேஷன் அட்டை, வங்கி பாஸ்புக் , ஆதார் அட்டை ஆகியவற்றுடன் அதற்கான நகலையும் எடுத்து வரவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.  பின்னர், அதற்குரிய படிவத்தில் விவரங்களை எழுதாமல் வெற்று படிவமாக உள்ள நிலையில் கையெழுத்து வாங்கி செல்கின்றனர்.

ஒரு சிலர் வெளியூர் சென்று இருந்தால் அவர்கள் தங்களது ஆவண நகல்களை கணக்கெடுக்கும் நபரின் வீட்டிற்கு எடுத்து வந்து தர சொல்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், `காப்பீடு மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பெயர் சேர்க்க வெற்று படிவத்தில் கையெழுத்து பெற்று, எங்களது பாஸ்புக் ஜெராக்சை  கணக்கெடுப்பாளர்கள்  பெற்றுச்செல்கின்றனர். வீடு, வீடாக வந்தால் தானே அவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களா? என தெரியும். காபி, டீ தரும் வீட்டில் அமர்ந்து கொண்டு எங்களை அங்கு வர சொல்கின்றனர். அவர்களுக்கு அங்கு இடம் கொடுத்து உதவும் வசதி படைத்தவர்களையும்,

வறுமை கோட்டிற்கு கீழ் சேர்த்து அவர்களும் அரசின் உதவி பெற உதவுகின்றனர். இதை தட்டி கேட்போரிடம் தகாத முறையில் பேசுவதோடு உங்கள் பெயரை எப்படி சேர்க்கிறீர்கள் பார்க்கலாம் என மிரட்டல் விடுக்கின்றனர். இரவு, பகல் பாராமல் நினைத்த நேரத்தில் வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிபிரிவு, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு இதுகுறித்து புகார் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்’ என்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

>