தஞ்சை, பெரம்பலூர், புதுகையில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை

திருச்சி: தஞ்சை பெரம்பலூர், புதுகையில் தியேட்டர்கள் இன்று திறக்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 16ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அக்டோபரில் நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மட்டும் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள், தமிழக முதல்வரை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து நவம்பர் 10ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.

அதன்படி, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தியேட்டரில் டிக்கெட் வாங்கும்போது, தியேட்டருக்குள் நுழையும்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் வகையில் தரையிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புதிய படங்கள் திரையிடப்படாது என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளதால், லாக்டவுனுக்கு முன் வெளியான படங்களையும் மீண்டும் தியேட்டர்களில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.. முககவசம் அணிந்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு, திரையரங்குகளில் அதற்கான அறிவிப்பு நோட்டீஸ், பேனர் வைக்கப்பட்டுள்ளது.

டெல்டாவில் நாகையில் 5, திருவாரூரில் 8, தஞ்சையில் 5, கரூரில் 8, பெரம்பலூரில் 4, அரியலூரில் 4 என 8 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. திருவாரூரில் ரசிகர்கள் வருவதை பார்த்துதான் காலை காட்சி திரையிடப்படும் என்றும், மதியம் காட்சி உண்டு என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். பெரம்பலூரில் உள்ள 4 சினிமா தியேட்டர்களும் இன்று திறக்கப்படவில்லை. பழைய படங்களை திரையிட்டால் கூட்டம் வராது என்பதால் தீபாவளியன்று திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அரியலூரில் உள்ள 4 தியேட்டர்களில் காலை காட்சி இன்று திரையிடப்படவில்லை. கரூரில் உள்ள 8 சினிமா தியேட்டர்களிலும் இன்று காலை காட்சி திரையிடப்படவில்லை. தஞ்சையில் தீபாவளியன்று தியேட்டர்களை திறக்க முடிவு செய்துள்ளதால் இன்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.. புதுக்கோட்டையிலும் தீபாவளியன்று படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது,

Related Stories:

>