×

ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?

துபாய்: நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள், 4 மாதங்கள் தள்ளிவைக்கப்பட்டு, கடந்த மாதம் துவங்கின. மேலும் இப்போட்டிகள் சவுதி அரேபியாவுக்கு மாற்றப்பட்டு, பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன. அனைத்து போட்டிகளும் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடந்தன.லீக் சுற்றில் 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று, மும்பை இந்தியன்ஸ் அணி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று டெல்லி கேப்பிடல்ஸ் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தது. பின்னர் குவாலிபயர் போட்டிகளில் வென்று, தற்போது இறுதிப்போட்டியில் இந்த அணிகள் மோதவுள்ளன. நடப்பு தொடரில் 2 அணிகளும் 3 முறை மோதியுள்ளன. மூன்றிலுமே மும்பை அணி எளிதான வெற்றியை பெற்றுள்ளது. இத்தொடரின் முதல் பாதியில் சிறப்பாக ஆடிய டெல்லி அணி, 2வது பாதியில் சொதப்பியது. பின்னர் தட்டுத்தடுமாறி பைனலுக்குள் நுழைந்திருக்கிறது. மும்பை அணியின் பேட்டிங் ஆர்டர் ரோஹித் ஷர்மா தலைமையில் வலுவாக உள்ளது.

இஷான் கிஷனும், குவின்டன் டி காக்கும் இத்தொடரில் தலா 483 ரன்களை குவித்துள்ளனர். சூர்யகுமார் யாதவ் 461 ரன்களை எடுத்துள்ளார். இவர்களை தொடர்ந்து அதிரடிக்கு கிரன் போலார்டும், ஹர்திக் பாண்டியாவும் உள்ளனர். கடைசி ஓவர்களில் இவர்கள் சிக்சர்களை பறக்க விடுவார்கள். இத்தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி, மும்பை அணி  என்பது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷன் 29 சிக்சர்கள் அடித்து, சிக்சர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்டியா 25 சிக்சர்கள், போலார்ட் 22 சிக்சர்கள், குவின்டன் டி காக் 21 சிக்சர்கள் என நடப்பு தொடரில் மிரட்டி இருக்கிறார்கள். பந்துவீச்சிலும் பும்ரா, போல்ட், ராகுல் சஹார், நாதன் கோர்ட்லர் என மும்பை அணி வலுவாக காட்சியளிக்கிறது. இத்தொடரில் 27 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவும், 22 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட்டும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2ம் இடத்திலும், 3ம் இடத்திலும் உள்ளனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரும், அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் வலுவாகவே உள்ளது. டெல்லி அணியின் ஓபனர் ஷிகர் தவான், இத்தொடரில் 603 ரன்களை குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார்.

ஸ்ரேயாஸ் 454 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டானிஸ், ரஹானே, பன்ட் மற்றும் ஹெட்மையர் என இக்கட்டான சமயங்களில் திறமையாக ஆடும் வீரர்களும் அடுத்தடுத்து இறங்க உள்ளனர். இத்தொடரில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் டெல்லியின் ரபாடா முதலிடத்தில் உள்ளார். அவருக்கு துணையாக நார்ட்ஜ், அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் மும்பை பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். டாஸ் வென்றால் டெல்லி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வார். இன்றைய போட்டியிலும் ஷிகர் தவானுடன், துவக்க ஆட்டக்காரராக ஸ்டானிஸ் இறங்குவார். ஐதராபாத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் இந்த ஜோடி நல்ல துவக்கத்தை அளித்தது. மும்பை இண்டியன்ஸ் இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. டெல்லி அணி முதன் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. ‘நம்பிக்கையுடன் இருக்கிறோம். பதற்றமில்லாமல் ஆடுவோம்’ என்று டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். முதல்முறையாக பைனலுக்கு தேர்வான டெல்லி அணி எப்படியாவது கோப்பையை கைப்பற்றவேண்டும் என்றும் 5வது முறையாக கோப்பையை கைப்பற்றும் துடிப்புடன் மும்பை அணியும் வரிந்து கட்டுவதால் இறுதிப்போட்டியில் அனல்பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Mumbai ,team ,IPL ,Delhi , Clash with Mumbai in IPL final today; Will Delhi team win the title for the first time?
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...