மத்திய பா.ஜ.க அரசு மிருக பலத்துடன் ஜி.எஸ்.டி-யை நிறைவேற்றிவிட்டார்கள்: அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் காட்டம்

சென்னை: மத்திய பா.ஜ.க அரசு மிருக பலத்துடன் ஜி.எஸ்.டி. வரியை நிறைவேற்றிவிட்டதாக அ.தி.மு.க பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாத கட்சிகள் மத்திய அரசாக உள்ளதாக தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணை தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. திட்டத்தால் தமிழக அரசிற்கு எந்த பயனும் இல்லை. மத்திய பா.ஜ.க அரசு மிருக பலத்துடன் ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றிவிட்டார்கள். தமிழகத்துக்கு தர வேண்டிய ரூபாய் 16 ஆயிரம் கோடியை தரவில்லை. முல்லைப்பெரியாறு, காவிரி விவகாரத்திலும் ஒன்றும் செய்யவில்லை என குறிப்பிட்டார். மேலும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை காலில் மிதித்துவிட்டு கர்நாடகாவில் இருந்து இன்று வரை காவிரி நீர் திறந்துவிடப்படவில்லை.

தொழில் முறைகளை ஊக்குவிப்பது போல விவசாயத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழகத்தில் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாத கட்சியாக பாஜக உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி வகிக்கும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அதேபோல் அ.தி.மு.க-வின் கூட்டணி கட்சிகள் நண்பர்களாகவே உள்ளனர் என அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். இருப்பினும் கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்குள் பல முரண்பாடான கருத்துக்கள் நிலவி வருகிறது. இத்தைகைய சூழலில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பாஜக-வை விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: